குழந்தையிடமிருந்து கற்றுக்கொள்ளும் செய்யறிவு தொழில்நுட்பம்!

ஆறுமாதக் குழந்தையின் தலையில் கேமரா பொறுத்தி அதன் தரவுகளை வைத்து புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கிவருகின்றனர். 
எடை குறைவான கேமராவுடன் குழந்தை |  YOUTUBE
எடை குறைவான கேமராவுடன் குழந்தை | YOUTUBE

ஆறுமாதக்குழந்தை 2 வயது ஆகும் வரை கிடைத்த தகவல்களைக் கொண்டு ஒரு புதிய செய்யறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆறுமாதக் குழந்தையின் தலையில் எடை குறைந்த கேமரா ஒன்றினைப் பொறுத்தி 25 மாதங்களுக்கு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. குழந்தை பார்ப்பது, கற்றுக்கொள்வது அனைத்தையும் அந்த கேமராவும் பார்த்துள்ளது. குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட வார்த்தைகள் அனைத்தையும் அந்த கேமராவும் கேட்டுள்ளது. 

குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள்வரை சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளைக் கொண்டு புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். குழந்தை விழித்திருக்கும் நேரத்தில் ஒரு பகுதி மட்டுமே இந்த கேமரா பொருத்தப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த தரவுகள் குழந்தைகள் மொழிகளைக் கற்றுக்கொள்ளும்போது சந்திக்கும் பிரச்னைகளை விளக்க உதவியாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். மனிதன் எப்படி மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான் என்பது குறித்த தகவல்களை நாம் கண்டறியலாம் என இந்த ஆய்வின் துணை ஆசிரியரும் நியூயார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளருமான வாய் கீன் வாங்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விளக்கும் காணொலியை நியூயார்க் பல்கலைக் கழகம் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

கிடைத்த 61 மணிநேர காணொலித் தரவுகளை வைத்து உருவாக்கப்பட்ட முதல்நிலை செய்யறிவு தொழில்நுட்பம், குழந்தையின் மூளை போல இயங்குவதாகக் கூறுகின்றனர். ஒரு வார்த்தையைச் சொல்லி, மூன்று புகைப்படங்களைக் காட்டினால், அதில் சரியான புகைப்படத்தை தேர்ந்தெடுக்கும் அளவிலான அறிவு இந்த தொழில்நுட்பத்திற்குக் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

சாட் ஜிபிடி, ஜெமினி மாதிரியான செய்யறிவு தொழில்நுட்பங்கள் எல்லாம் கோடிக்கணக்கான கணினி தரவுகள் மூலம் சிந்திக்கின்றன. ஆனால் அவை எதுவும் மனிதன் குழந்தையிலிருந்து பெறும் அனுபவத்திற்கு ஈடாவதில்லை என வாங்க் தெரிவிக்கிறார். 

ஒரு குழந்தை, வார்த்தைகளுடன் அர்த்தங்களைப் பொறுத்திக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் முறையையே இந்த தொழில்நுட்பமும், காணொலியில் கிடைக்கும் காட்சிகள் மற்றும் ஒலிகளை பொருத்தி கற்றுக்கொள்கிறது. செய்யறிவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இது மிகவும் அர்ப்புதமான முயற்சி என கலிபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹெதர் போர்ட்ஃபீல்ட் தெரிவிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com