

வாஷிங்டன் : யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
யேமனில் ஹௌதி படையினரின் இலக்குகளை குறிவைத்து 13 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளின் ஆதரவுடன் இந்த தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன் தெரிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் சர்வதேச சரக்கு மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாத ஹௌதி படை நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதலக்ள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, முன்னதாக சிரியாவிலும், இராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆசியாவில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவுப் படையினா் மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சிரியாவிலும், இராக்கிலும் அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் அழிவுகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதன் மூலம் அந்த நாடுகளின் இறையாண்மையை அமெரிக்கா குலைத்துள்ளது.பிராந்தியத்தில் பதற்றத்தையும் அதிகரித்து, நிலைத்தன்மையை சீரழிக்கும் அமெரிக்காவின் மற்றொரு தவறான போா் நடவடிக்கை இது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.