காலப்பயணம் மூலம் காதலர் தினத்தை 1 நிமிடத்தில் கடக்கப்போகும் 3 பேர்!: இந்திய விஞ்ஞானி விளக்கம்

மூன்று பேர் இந்த ஆண்டு 'டைம் டிராவல்' மூலம் பிப்.13 ஆம் நாளிலிருந்து நேரடியாக பிப்.15 - க்கு 1 நிமிடத்தில் பயணிக்கவிருப்பதாக கேட்பரி 5 ஸ்டார் தெரிவித்துள்ளது. 
5 ஸ்டார் வெளியிட்ட படம் | X
5 ஸ்டார் வெளியிட்ட படம் | X

உலகமே காதலால் கரைந்துபோகும் பிப்.14-ஐ அடியோடு வெறுக்கும் சிங்கிள்களுக்காக கேட்பரி 5 ஸ்டார் ஒரு புதிய பிரசாரத்தை இந்த வருடம் முன்னெடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்.14-ஐ காலப்பயணம் மூலம் காணாமல்போகச் செய்வதே அந்தப் புதிய பிரசாரம். 

எல்லா வருடமும் காதலர் தினத்தன்று 'டூ நத்திங் (Do nothing)' என்ற பிரசாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுத்துவருகிறது 5 ஸ்டார். கடந்த ஆண்டு காதலர்களால் நிரம்பி வழியாத இடங்களைக் கண்டுபிடிக்கும் செயலி ஒன்றினை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்தது.

இந்த ஆண்டு அதை விட ஒரு படி! அல்ல, ஒரு மலை தாண்டி, பிப்.14 எனும் நாளையே டைம் டிராவல் மூலம் கடந்துவிடும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. 

மூன்று பேர் இந்த ஆண்டு பிப்.13 ஆம் நாளிலிருந்து பிப்.15 - க்கு பயணிக்கவிருக்கின்றனர். பிப்.14 2024 எனும் நாள், அவர்கள் வாழ்க்கையில் இருக்காது. வரலாறு காணாத இந்த புதிய பிரசாரத்தை கேட்பரி 5 ஸ்டார் இந்திய நேரப்படி பிப்.14 மாலை 4 மணிக்கு செய்துகாட்டவிருக்கிறது. 

இந்தக் காலப்பயணம் எப்படி சாத்தியம் என்பதை விஞ்ஞானி நம்பி நாராயணன் விளக்கும் காணொலியையும் 5 ஸ்டார் வெளியிட்டுள்ளது. 

மூன்றுபேர் இருக்கும் கலனைக் கொண்ட பெரிய கப்பல் ஒன்று அமெரிக்க சமோவா மற்றும் சமோவா கடல் எல்லையைத் தாண்டவிருக்கிறது. சர்வதேச நேரத்தின்படி அமெரிக்க சமோவாவில் பிப்.13 இரவு 11.59 மணிக்கு அந்த எல்லையைத் தாண்டும்போது சமோவாவில் பிப்.15 ஆம் நாள் துவங்கியிருக்கும்.

அதாவது சர்வதேச நேரத்தின்படி 24 மணிநேரம் ஒரு நிமிடத்தில் கடக்கப்படபோகிறது. பிப்.14 எனும் நாள் அந்த மூவருக்கும் சர்வதேச நேரத்தின்படி ஒரு நிமிடம் மட்டுமே! 

பிப்.14ஐ சந்திக்காத அந்த மூவரும் 5 ஸ்டார் சாப்பிட்டு, ஒன்றும் செய்யாமல் இருப்பார்கள் (Do nothing) என அந்நிறுவனம் கூறியுள்ளது. 

காதலர் தினத்தில் தனிமையில் தவிக்கும் சிங்கிள்களுக்கு ஆதரவு கொடுக்க, ஆறுதல் அளிக்க இந்த காலப்பயணத்தை செய்யவிருக்கிறது கேட்பரி 5 ஸ்டார். இந்த நிகழ்வை நேரலையில் பார்ப்பதற்கான  வழிவகைகளையும் அந்நிறுவனம் செய்துள்ளது. இந்த ஆண்டு பிப்.14ஐத் தவிர்க்கப்போகும் அந்த மூன்று பேரை மொத்த உலகமும் கண்டுகளிக்கலாம். 

காதலர் தினம் வேண்டாம் எனும் சிங்கிள்கள் எல்லோரும் இந்த சரித்திர நிகழ்வைக் காண ஆவலாக உள்ளனர். மனித சமுதாயத்தின் நீண்ட நாள் ஆசை இது என 5 ஸ்டார் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com