பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!

பிரபல பாப் ஸ்டார் சஹீராவுக்கு 21 அடியில் வெண்கல சிலை வைத்திருக்கிறார்கள்.
பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!

நம்மூர் இசைப் பிரியர்களுக்கும் பாடல்களைக் கேட்பவருக்கும் ‘பாப் இசை’ பற்றிய அறிமுகமும் அதன் இசை வேகமும் தெரிகிறதோ என்னவோ.. ஆனால், ஒருகாலத்தில் ‘வக்கா.. வக்கா’வை உச்சரிக்காதவர்களே இல்லை என்னும் நிலை இருந்ததுக்கு ஒரே காரணம் சஹீராதான். 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கொலம்பியாவின் பாரன்குயிலா நகரில் பிறந்தவர் சஹீரா இஸவேல் மெபாரக் ரிபோல். 

இவரது தந்தை லெபனான் நாட்டுக்காரர். தாய், கொலம்பியாக்காரர். தனது எட்டாவது வயதில் தனது முதல் பாடலை எழுதிய சஹீரா, பதின்மூன்று வயதில் ஆல்பம் வெளியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

இவரது முதல் இரண்டு ஆல்பங்களும் "அட்டர் ஃப்ளாப்' என்பார்களே அந்த ரகம்! மூன்றாவது ஆல்பத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் இவரே முழுக்கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்தார். 1996-ஆம் ஆண்டு பிஸ் டெஸ்கல்சோஸ் (Pies Descalzos) என்ற பெயரில் வெளியான அந்த ஆல்பம் 3 மில்லியன் எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்தன. அந்த ஆல்பத்தில் அவரது அரேபிய, கொலம்பிய முத்திரை பளிச்சென்று வெளிப்பட்டது. அதன்பிறகு ஏறுமுகம்தான்.

முதலில் ஸ்பானிஷ் மொழியுலகில் மட்டுமே பிரபலமாக இருந்த இவர், வெகு சீக்கிரம் இசை ரசிகர்களைத் தனது கவர்ச்சி நடனத்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக இனிமையான குரலாலும் தன்வயப்படுத்தினார். உலகம் முழுவதும் தனது பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், தனது 20-வது வயதில் அமெரிக்காவின் மியாமி நகருக்குக் குடும்பத்தோடு குடியேறினார்.

2000 ஆம் ஆண்டில் தனது முதல் கிராமி விருதைப் பெற்றார். 2001-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் தனது முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் பிரபலமான பாப் இசைப் பாடல்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதன்பிறகு பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரானார். இவரது இசை விடியோக்கள் தனித்துவமான இசைமைப்புக்கும் விறுவிறுப்பான இடுப்பசைவு நடனங்களுக்கும் புகழ் பெற்றவை.

2010-ல் வெளியான இவரது ஆல்பத்தின் ஒரு பாடல்தான் "ஷமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா ஓய்..ஓய்”. இந்தப் பாடல் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் தீம் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தொடக்க நாள் நிகழ்ச்சியில் பாடி, ஆடி கவர்ந்தார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
 

2012 ஆம் ஆண்டுக்குள் எல்லாக் காலங்களிலும் உலகிலேயே மிக அதிக ரசிகர்களைப் பெற்ற ஒரே கொலம்பியப் பாடகி என்ற இடத்தைப் பிடித்தார். அதனால், குழந்தைகளுக்காக ஓர் அமைப்பை நிறுவி கொலம்பியா நாட்டுக் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பதில் தான் சம்பாதிக்கின்ற பணத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறார். ஐ.நா.சபையின் அமைப்பான யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றுகிறார்.

ஸ்பெயின் நாட்டுக் கால்பந்து வீரர் ஜெரார்ட் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர் அவரை விவாகரத்து செய்தார். அப்போது, சஹீராவுக்கு ஒரு மகன் இருந்தார். தொடர்ந்து, சில மாதங்களில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த வழக்கறிஞருடன் இணைந்து வாழ ஆரம்பித்தவர் 2022-ல் அவரையும் பிரிந்து தன் முன்னாள் கணவருடனே வாழ்ந்து வருவதாகத் தகவல்.

இதெல்லாம், சஹீராவின் சோகக் கதைகள் என நினைப்பதற்குக் கூட நேரமில்லாத வகையில் தன் அடுத்தடுத்த இசை ஆல்ப பணிகளில் தீவிர கவனத்தைச் செலுத்தி வந்தவருக்கு சமீபத்தில் அவரின் சொந்த ஊர் இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது.  பாரன்குயிலா என்னும் அந்த நகரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றதற்காக அந்நகர நிர்வாகம் நகரின் முக்கிய இடமான மக்டலேனா ஆற்றின் கரை அருகே 21 அடி உயரத்தில் (6 மீட்டர்) சஹீராவுக்கு வெண்கல சிலையை வைத்திருக்கிறது. அதுவும் சஹீராவின் மிகப் பிரபலமான ‘ஹிப்ஸ் டோண்ட் லை’ ஆல்பத்தில் இடம்பெற்ற இடை அசைவு (பெல்லி) நடன தோற்றத்தில்! இச்சிலை சஹீராவின் பெற்றோர் முன்னிலையில் கடந்த டிச.27 ஆம் தேதி திறக்கப்பட்டது.

உலகின் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் சிலைகள் இருக்கின்றன. ஆனால், தன் கலை மூலம் நவீன இசையுடன் அரேபியா மற்றும் கொலம்பியாவின் பாரம்பரிய மரபிசையைக் கலந்து தன் குரலால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சஹீராவுக்கும் சிலை வைத்து தங்களின் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது அந்நகர நிர்வாகம். ஆனால், சஹீராவுக்கு சிலை வைப்பது இது முதல் முறை அல்ல. 2006-ல் இதே பாரன்குயிலாவின் உள்ளூர் கால்பந்து மைதானம் ஒன்றின் முகப்பில் ஜீன்ஸ், காலணிகளுடன் கிட்டாரைக் கையில் வைத்திருக்கும் சஹீராவின் 16 அடி சிலையையும் நிறுவினார்கள். 

கிராமி விருதுகளைப் பெற்றவர், கோல்டன் குளோப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டவர், பெரும் கொடையாளர், சிறந்த எண்ணிலடங்கா சாதனைகளுக்குச் சொந்தக்காரி என்கிற பெருமிதத்துடன் லத்தீன் அமெரிக்காவே சஹீராவைக் கொண்டாடுகிறது. தனக்கு வெண்கல சிலையை அமைத்ததற்காக நிர்வாகத்திற்கும் சிலையை செய்த சிற்பி யினோ மார்க்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கும் தன் நன்றியைத் தெரிவித்த சஹீரா அடுத்த பாடலுக்குத் தயாராகி வருகிறார். 

அவரது தீவிரமான ரசிகர்கள், இந்த புதிய வெண்கல சிலைக்கு முன் தங்கள் புகைப்படங்களை எடுத்து சஹீராவுக்கு வாழ்த்துகளைக் கூறுவதுடன் உத்வேகத்தையும் அளித்து வருகின்றனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com