
இலங்கை சென்றிருக்கும் பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கொழும்பில், இன்று நடைபெற்ற இருநாட்டுத் தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின்போது சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு, எண்மமயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு, இலங்கைக்கான இந்தியாவின் மறுசீரமைக்கப்பட்ட கடனுதவி ஆகியவை அதில் அடங்கும். இது தவிர மேலும் மூன்று ஒப்பந்தங்களும் கையொப்பமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, நேற்று இலங்கை சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்நாட்டு அதிபரின் செயலகத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையிலான உயர்நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், அதன் இறுதியாக, இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எண்மமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
பாங்காக்கிலிருந்து..
'பிம்ஸ்டெக்' எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாங்காக் சென்றிருந்தார் பிரதமர் மோடி.
அங்கு தனது பயணத்தை முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்து கிளம்பி இலங்கை தலைநகர் கொழும்பு வந்தார். அவருக்கு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்நிலைக் குழு வரவேற்பு அளித்தது.
பிரதமர் மோடி தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு அமைந்திருக்கும் பகுதி முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்ற பிறகு அந்நாட்டுக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் மோடி. இதற்கு முன்பு பிரதமர் மோடி 2019-இல் இலங்கை சென்றிருந்தார்.
இலங்கைக்கு கடன்
ஒரு சில ஆண்டுகளுக்கு முன், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, 450 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியுவியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியது. இந்நிலையில், மோடியும் திசா நாயகவும் இன்று நடத்திய பேச்சுவார்த்தை, இந்தியா வழங்கும் கடன் மறுசீரமைப்பு மற்றும் நாணயப் பரிமாற்றத்தில் இலங்கைக்கு இந்தியா உதவுவதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.