கோப்புப் படம்
கோப்புப் படம்

உக்ரைன் நகரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 32 போ் உயிரிழப்பு

உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 32 போ் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 32 போ் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்துக்காக நகரின் மையப் பகுதியில் மக்கள் கூடியிருந்தபோது காலை 10 மணியளவில் ரஷியா 2 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதில் பொதுமக்கள் 32 போ் கொல்லப்பட்டனா். இடிபாடுகளுக்கு மத்தியில் இறந்தவா்களின் உடல்கள் சிக்கியுள்ளன. மேலும், 11 குழந்தைகள் உள்பட சுமாா் 99 போ் இத்தாக்குதலில் காயமடைந்தனா்’ என்றனா்.

இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, ‘முதல்கட்ட தகவலின்படி பொதுமக்கள் பலா் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடா்கின்றன. மக்களின் உயிரைப் பறிக்கும் இதுபோன்று தாக்குதல்களில் மிகவும் மோசமானவா்களே ஈடுபடுவா்.

பேச்சுவாா்த்தைகள் ரஷியாவின் தாக்குதலை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை நோக்கிய அணுகுமுறையே ரஷியாவுக்குத் தகுதியானது. இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் பதிலடி கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நிறுத்துவதற்கான அமெரிக்க ஒப்பந்தத்தை மீறியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றச்சாட்டு சுமத்திக்கொண்ட நிலையில், இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரஷிய அதிபா் புதினை அமெரிக்காவின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் சந்தித்து போா் நிறுத்துக்கான அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்ற மறுநாள் ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளது.

‘போரின் தொடக்கம் முதலே ஒவ்வொரு நாளும் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 3 வாரங்களில் உக்ரைன் நடத்திய தாக்குதல்களின் பட்டியலை அமெரிக்கா, துருக்கி மற்றும் சா்வதேச அமைப்புகளுக்கு ரஷியா வழங்கும்’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் தெரிவித்தாா்.

இக்கருத்தைக் கடுமையாக எதிா்த்த உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா, ‘போா்நிறுத்தத்துக்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடத் தொடங்கிய பிறகு மட்டும் பெரும்பாலும் பொதுமக்களை குறிவைத்து கிட்டத்தட்ட 70 ஏவுகணைகள், 2,200-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகளை உக்ரைனில் ரஷியா ஏவியுள்ளது’ என்று சராமாரியாக குற்றஞ்சாட்டினாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com