ஒரு வாழைப் பழம் ரூ. 565! விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’!

ஒரு வாழைப் பழத்தை ரூ. 565-க்கு விற்கும் விமான நிலையம் பற்றி...
இஸ்தான்புல் விமான நிலையம்
இஸ்தான்புல் விமான நிலையம்
Published on
Updated on
2 min read

ஒரு வாழைப் பழத்தை ரூ. 565-க்கு விற்பனை செய்யும் உலகின் விலை உயர்ந்த விமான நிலையத்தைப் பற்றி பயணிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விமான நிலையம் என்றாலே தாகத்துக்கு தண்ணீர் வாங்கக் கூட தயங்கும் அளவிலான விலையில் பொருள்களை விற்பனை செய்வது அனைவரும் அறிந்ததே.

இப்படிப்பட்ட விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’ஆக மாறியுள்ளது இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம்.

துருக்கி நாட்டில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்று இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம். ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களுக்கு நடுவே அமைந்துள்ளதால், சர்வதேச அளவில் முக்கிய விமான நிலையமாக இருக்கின்றது. நாளொன்றுக்கு 2.20 லட்சம் பயணிகளை இந்த விமான நிலையம் கையாண்டு வருகின்றது.

ஐரோப்பாவின் மிகப் பரபரப்பான இஸ்தான்புல் விமான நிலையத்தில் நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், உலகளவில் உள்ள அனைத்து விமான நிலையங்களைவிட இஸ்தான்புலில் மிக அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்வதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாழைப்பழம் ரூ. 565

இந்த விமான நிலையத்தில் ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ. 565-க்கு (5 யூரோ) விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர்.

மேலும், ஒரு பீரின் விலை ரூ. 1,697 (15 யூரோ), லாசக்னா (பாஸ்தா போன்ற உணவு) 90 கிராமின் விலை ரூ. 2,376 (21 யூரோ) என்று பயணிகள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

மெக்டொனால்ட்ஸ் மற்றும் பர்கர் கிங் போன்ற நிறுவனங்களும் மற்ற விமான நிலையங்களில் விற்பனை செய்யும் விலையைவிட மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக விலை ஏன்?

ஐரோப்பியா மற்றும் ஆசிய கண்டங்களுக்கு இடையே பயணிகள் விமானங்களை மாறிச் செல்வதற்கு முக்கிய நிறுத்தமாக இஸ்தான்புல் செயல்பட்டு வருகின்றது.

விமானம் புறப்படும் நேர மாறுபாடுகள் காரணமாக, ஒரு விமானத்தில் வந்திறங்கும் பயணி, மற்றொரு விமானத்தில் ஏறுவதற்கு, பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, அங்கிருக்கும் நேரத்தில் அங்கிருக்கும் உணவகங்களில்தான் பயணிகள் சாப்பிட்டாக வேண்டும்.

மேலும், விமான நிலையத்தின் அழகிய உட்புற வடிவமைப்பு உள்ளிட்டவற்றைப் பார்க்கவும் அங்கு வரும் பயணிகள் விரும்புவார்கள். இஸ்தான்புல் விமான நிலைய உணவகங்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு அதீத லாபம் ஈட்டுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

அதற்காக, ஒரு உணவுக்கான விலையில் ஒரு கட்டுப்பாடு வேண்டாமா என.. இஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவருந்தும் ஒவ்வொரு பயணியும் நிச்சயமாக மனதுக்குள் கேட்டுக்கொள்வார்கள்.

எனவே, அடுத்த முறை இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொண்டால் சிற்றுண்டி எடுத்துச் செல்லுங்கள், இல்லையெனில் வாழைப் பழத்துக்கு செலவழிக்க தயாராக இருங்கள்.

(சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட மலிவு விலை கஃபேவில் டீ விலை ரூ.10, சமோசா, வடை விலை ரூ. 20 என்பது குறிப்பிடத்தக்கது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com