
இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியா்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனா்.
முன்னதாக, பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்திவைப்பதோடு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தீல் தீா்மானிக்கப்பட்டது.
இதுதவிர, ‘சாா்க்’ கூட்டமைப்பு நாடுகளுக்கான நுழைவு இசைவுத் திட்டத்தின்கீழ் (எஸ்விஇஎஸ்) பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, பாகிஸ்தானியா்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து எஸ்விஇஎஸ் விசாக்களும் ரத்து, அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடல், இந்த எல்லை வழியாக உரிய அனுமதியுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியா்கள் வரும் மே 1-ஆம் தேதிக்குள் இதே எல்லை வழியாகத் திரும்புவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
இந்நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்திருந்த பாகிஸ்தானியா்கள் சிலா், அட்டாரி-வாகா எல்லையை வியாழக்கிழமை வந்தடைந்தனா். அங்கிருந்து நிலப்பகுதி வழியாக பாகிஸ்தானுக்கு திருப்பிச் செல்லத் தொடங்கினா்.
பாசறை திரும்புதல் நிகழ்ச்சிகளில் மாற்றம்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி, ஹுசைனிவாலா (ஃபெரோஸ்பூா் மாவட்டம்) மற்றும் சாத்கி (அபோஹா் மாவட்டம்) ஆகிய எல்லைகளில் நடைபெறும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் ராணுவ கமாண்டருடன் கைகுலுக்கும் நடைமுறையை நிறுத்துவதாக எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தெரிவித்தது.
மேலும், ‘நிகழ்ச்சியின்போது எல்லையில் உள்ள கதவுகள் இனி மூடப்படுகிறது. எல்லை கடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு அமைதியும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளும் ஒன்றாக பயணிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். மற்றபடி, மேற்கூறிய எல்லை பகுதிகளில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வழக்கம்போல் காணலாம்’ என பிஎஸ்எஃப் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.