
உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்.
மருந்துகளின் விலைகளைக் குறைப்பது குறித்து முடிவெடுக்க செப்டம்பர் 29ஆம் தேதி வரை மருந்து நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்த புதிய உத்தரவால், அமெரிக்க பங்குச் சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
இது தொடர்பாக, 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும், அமெரிக்க அதிபர் கடிதம் எழுதியிருப்பதாகவும், உலகளவில், எவ்வாறு மருந்துகளின் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், அதன் விலையை வெளிநாடுகளுக்கு ஏற்பக் குறைக்க வேண்டும், அவ்வாறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைக்கவில்லை என்றால், அமெரிக்க அரசு, மருந்துகளின் விலைகளைக் குறைக்க வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்றும் அல்லது வெளிநாடுகளிலிருந்து விலை குறைவான மருந்துகளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது என்ற தீர்மானத்தில் கடந்த மே மாதம் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
எலி லில்லி, சனோஃபி, மெர்க் அண்ட் கோ, ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்ட்ரா ஸெனெகா உள்ளிட்ட 17 பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனது நிர்வாகத்தின் பல்வேறு ஆலோசனைகளில் இதுதான் நல்ல தீர்வாக இருந்தது, அதைவிடுத்து ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம்சாட்டுவது, விலைக் குறைப்புக்காக அரசு கொள்கையை மாற்றுவது போன்றவை, மருந்து உற்பத்தித் துறைக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிபரின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன.
இதையும் படிக்க.. மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.