
காஸாவில் உணவின்றி பசியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-யை எட்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.
தங்கள் நாட்டு பணயக் கைதிகளை மீட்கும்பொருட்டு இஸ்ரேல், காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தற்போது காஸாவில் உணவின்றி பசி, பட்டினியால் குழந்தைகள் உள்பட மக்கள் அனைவரும் செத்துக் கொண்டிருக்கின்றனர். மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க மறுக்கும் இஸ்ரேலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு, உணவு இல்லாமல் பசியில் பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை 200-யை எட்டியுள்ளதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பசி, பட்டினியால் 193 பேர் இறந்துள்ளனர். இதில் 96 பேர் குழந்தைகள். கடந்த 24 மணி நேரத்தில் பசியால் 5 பேர் இறந்துள்ளதாகக் கூறியுள்ளது.
காஸாவிற்கு வழங்கப்பட்டு வரும் உணவு மிகவும் குறைவானது, அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை என்று ஐ.நா. தொடர்ந்து கூறி வருகிறது.
காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய லாரிகள் இடையிலே வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல காஸாவில் தண்ணீர், மருந்து பொருள்கள், குழந்தைகளுக்கான இன்குபேட்டர் வசதி பற்றாக்குறை நிலவுகிறது. காயங்களுக்கான மருந்துகள் காலியாகிவிட்டதாக காஸாவில் உள்ள குவைத் மருத்துவமனை இன்று கூறியுள்ளது. அங்கு ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன.
மேலும் இன்று காலை முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.