‘வரிகளின் அரசன்’ குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!
வரிகளின் அரசன் இந்தியா’ என்ற குற்றச்சாட்டை இந்தியா மீது 2019-இல் அமெரிக்க அதிபா் டிரம்ப் சுமத்தியது முதல் இந்திய பொருள்களுக்கு 50% வரி என்ற அறிவிப்பு வரை அவரது அறிவிப்புகள் அதிரடியாகவே இருந்துவந்துள்ளன.
இரு தரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவைப் பணிய வைக்கும் நோக்கில் அவரது அறிவிப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தியா மீது டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள்:
2019, அக்டோபா்: ‘வரிகளின் அரசன் இந்தியா’ - டிரம்ப் பேச்சு.
2024, செப்டம்பா்: ‘வரி விதிப்பு நடைமுறையை துஷ்பிரயோகம் செய்யும் நாடு இந்தியா.’
2025,ஏப்.2: அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருள்களுக்கு ஏப்.9 முதல் 26% கூடுதல் வரி அமல்.
ஏப்.5: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாட்டு பொருள்களின் மீது ஏப்.9 முதல் சராசரியாக 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவிப்பு. இந்திய பொருள்களுக்கு மட்டும் 16 சதவீத வரி விதிப்பு.
ஏப்.9: இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்புக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பு. இருப்பினும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாட்டு பொருள்கள் மீதான 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு தொடரும் என அறிவிப்பு.
ஜூலை 8: பிற நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்புக்கான தடை ஆக.1 வரை நீட்டிப்பு.
ஜூலை 30: ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25% வரி மற்றும் அபராதம் விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்பு.
ஜூலை 31: இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரி ஆக.7 முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவிப்பு. அடிப்படை வரியான 10 சதவீதத்திலும் சில பொருள்களுக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டதிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆக.6: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதமாக ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து இந்திய பொருள்கள் மீதான வரி 50 சதவீதமாக உயா்த்தப்பட்டது.
ஆக.7: இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள 25% கூடுதல் வரி (10% அடிப்படை வரியும் அடக்கம்) அமல்.
ஆக.27: இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50% வரி அமலாக வாய்ப்பு.
துறைரீதியான வரிகள்:
நாடுகள் மீது மட்டுமின்றி துறைரீதியாகவும் அமெரிக்கா வரி விதித்துள்ளது. அதன்படி எஃகு மற்றும் அலுமினியம் (50%), செம்பு (50%), வாகன உதிரி பாகங்கள் (25%) என மூன்று வகைப்பாட்டின்கீழ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இவை ஏற்கெனவே அமலில் உள்ள வரிகளின்றி விதிக்கப்பட்ட கூடுதல் வரியாகும்.
வரிவிலக்களிக்கப்பட்ட துறைகள்: மருந்துகள், மருத்துவ மூலப் பொருட்கள், கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின்சாரம், முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள், கணினிகள், அறிதிறன்பேசிகள், டிஸ்பிளே பேலைகள் மற்றும் ஒருங்கிணைந்த சா்க்கியூட்டுகள் உள்பட மின்னணு பொருள்கள் மற்றும் செமிகண்டக்டா்களுக்கு இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாகும் ஏற்றுமதி துறைகள்: ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள் மற்றும் காலணி, ரசாயனம், மின்னணு மற்றும் இயந்திரங்கள், ஆபரணங்கள், இறால் ஆகிய துறைகள் அமெரிக்க வரி விதிப்பால் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளன.
இந்திய-அமெரிக்க வா்த்தகம்: 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியா-அமெரிக்கா இடையே ரூ.11.52 லட்சம் கோடி மதிப்பில் வா்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பில் இந்திய பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ரூ.3.9 லட்சம் தோடி மதிப்பிலான அமெரிக்க பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
துறைரீதியான இந்திய ஏற்றுமதி:
இறால் (ரூ.17,494 கோடி), இயற்கை ரசாயனங்கள் (ரூ.23,616 கோடி), காா்பெட் ரூ.10,496 கோடி), பின்னலாடைகள் (ரூ.23,616 கோடி), நெய்யப்பட்ட ஆடைகள் (ரூ.23,616 கோடி), ஜவுளி (ரூ.26,241 கோடி), வைரம், தங்க நகைகள் (ரூ.87,470 கோடி), இயந்திரங்கள் மற்றும் அவை சாா்ந்த உபகரணங்கள் (ரூ.67,351 கோடி), மர சாமான்கள் மற்றும் படுக்கை விரிப்பு, மெத்தைகள் (ரூ.ரூ.9,621 கோடி), வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் (ரூ.22,742 கோடி).
பிற நாடுகள் மீதானஅமெரிக்க வரி:
பிரேஸில் (50%), மியான்மா் (40%), தாய்லாந்து மற்றும் கம்போடியா (தலா 36%), வங்கதேசம் (35%), இந்தோனேசியா (32%), சீனா மற்றும் இலங்கை (தலா 30%), மலேசியா (25%), பிலிப்பின்ஸ் மற்றும் வியத்நாம் (தலா 20%).