
ரஷியாவுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடியாக, டெட் ஹேண்ட் எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் அமைப்பு பற்றி முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் நினைவூட்டியிருந்தார்.
முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வெதேவ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, ரஷ்யாவின் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் திறன் பற்றி நினைவூட்டியிருந்தது, அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான காரசார மோதல் போக்கின் மிக மோசமான கட்டத்தை எட்டியதாகக் கருதப்பட்டது.
உலக வல்லரசுகளுக்கு இடையே அதிகரித்து வரும் வார்த்தை மோதல்களக்கு இடையே இந்த எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக, ரஷிய எல்லையில் தன்னுடைய இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், டெட் ஹேன்ட் என்ற வார்த்தையை முன்னாள் ரஷிய அதிபர் பயன்படுத்தியதற்கு பதிலாகத்தான், இந்தியா - ரஷிய பொருளாதாரங்கள் செத்த பொருளாதாரங்கள் என்று டிரம்ப் பேசியிருந்தார்.
இத்தனைக்கும் காரணமான அந்த டெட் ஹேன்ட் என்றால் என்ன? இந்த வார்த்தை அவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஏன்? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
பனிப்போல் காலத்திலேயே ரஷியாவில் உருவாக்கப்பட்ட மிக மோசமான அணு ஆயுத தாக்குதல் அமைப்புதான் டெட் ஹேண்ட். ரஷியாவின் புற எல்லையில், பாதி-தானியங்கி அணுசக்தி தாக்குதல் அமைப்பு. இது ரஷியாவின் 'டூம்ஸ்டே சாதனம்' என்றும் அழைக்கப்படுகிறது, இது கட்டளை மையமே தகர்ந்துவிட்டால் தாக்குதலைத் தொடர்வதற்கான அமைப்பு. ஒருவேளை, அணு ஆயுதப் போர் தொடங்கி, கட்டளையிடுவதற்கான தலைவர்கள் இறந்துவிட்டாலும், போரை தொடர்ந்து முன்னெடுத்து, எதிரிகளை தரைமட்டமாக்கும். ஒரு நாட்டில் அணு ஆயுதத் தாக்குதல் தொடங்கிவிட்டால், நிலத்தில் ஏற்படும் சப்தங்கள், அதிர்வுகள், அணு ஆயுதத்தின் அழுத்தத்தை உணரும் சென்சார்கள் மூலம் உறுதிசெய்துகொள்ளும்.
பிறகு, ரஷிய தலைவர்களிடமிருந்து தொடர்ந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளை இந்த அமைப்பானது கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
ஒருவேளை, ரஷிய தலைவர்கள், போர் குறித்த கட்டளைகளைப் பிறப்பிப்பது நின்றுவிட்டால், இந்த அமைப்புக்கு மனிதர்களிடமிருந்து எந்த கட்டளையும் வராவிட்டால் உடனடியாக இது தனது தானியங்கி கட்டளை அமைப்பை இயக்கிவிடும். அது, ரஷிய எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் தரையிலிருந்து பாயும் ஏவுகணைகள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு ஆயுத ஏவுதளங்கள் என அனைத்தையும், எதிரிகளின் நிலைகளைக் குறிவைக்கத் தொடங்கிவிடும்.
டூம்ஸ்டே ரேடியோ தான், இதன் தொலைத்தொடர்பு சாதனமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம்தான் தலைவர்கள் பிறப்பிக்கும் கட்டளைகள் டெட் ஹேண்டுக்கு கடத்தப்படுகிறது. அல்ட்ரா-குறைந்த-அலைவரிசை வானொலி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் அழிந்துவிட்டாலும் செயல்படும்.
இந்த டெட் ஹேண்ட் என்பது விவாதத்துக்குரியது என்றாலும் உண்மை. பலரும் இது ஒரு கற்பனை என்றும் கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.