பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு சதி? தலைமைத் தளபதி மறுப்பு
பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்க ராணுவம் சதி செய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாடு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் மறுத்துள்ளாா்.
அதே நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதி செய்கிறது என்று அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முனீா் பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸல்ஸில் சிறப்புப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:
நாட்டின் பாதுகாவலன் என்ற பங்களிப்பைத் தவிர வேறு எந்தப் பதவியிலும் எனக்கு விருப்பமில்லை. கடவுள் என்னை பாகிஸ்தானின் பாதுகாவலராக்கியுள்ளாா். நான் நாட்டின் ராணுவ வீரன். நாட்டுக்காகத் தியாகம் செய்வது மட்டுமே எனது விருப்பம்.
மற்றபடி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க ராணுவம் முயலுகிறது என்பதெல்லாம் வெறும் வதந்திகள்தான். ராணுவம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.
அண்டை நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தானுக்குள் அனுப்பி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு நன்மைகளை பாகிஸ்தான் செய்துள்ளது. ஆனால், இப்போது இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சதி செய்கிறது.
பாகிஸ்தானில் ஏராளமான இயற்கை வளங்கள், அரிய கனிமங்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு பாகிஸ்தானை கடனில் இருந்து மீட்க முடியும். பாகிஸ்தான் விரைவில் செழிப்புமிக்க நாடாக உயரும்.
அமெரிக்கா, சீனா இரண்டுமே பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகள். ஒரு நண்பரைத் தக்கவைக்க மற்றொரு நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றாா்.