
ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் இருவருக்குமான சந்திப்பு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ‘முதல் படி’ என்று கூறினார்.
உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நேற்று (ஆக.18) நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், அமெரிக்க, உக்ரைன், ஐரோப்பிய தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரைடுரிச் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லெயென், நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “முக்கிய விருந்தினர்களுடன் மிகச் சிறந்த சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தின் போது உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் என்னென்ன என்பது பற்றி விவாதித்தோம். இந்த உத்தரவாதங்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளால் அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் வழங்கப்படும்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரஷிய அதிபர் புதின் - உக்ரனை அதிபர் ஜெலென்ஸ்கி இருவரையும் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளேன்.
அந்தச் சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுடன் நானும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடந்து வரும் போருக்கு முடிவை எட்ட இது ஆரம்ப கட்டமாகும்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் ரஷியா மற்றும் உக்ரைனுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களின் கவனத்திற்கு நன்றி!” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.