செம்மணி புதைகுழியில்...! குழந்தைகளின் உடைகள், பாட்டில், 141 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

இலங்கையில் செம்மணி புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட குழந்தைகளின் பொருள்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் குறித்து...
செம்மணி புதைகுழியில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்...
செம்மணி புதைகுழியில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்...AP
Published on
Updated on
1 min read

இலங்கை நாட்டில் உள்ள செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து குழந்தைகளின் பால் பாட்டில் உள்ளிட்ட பொருள்களும், 141 பேரின் மனித எலும்புக்கூடுகளும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் அரசுப் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரானது, கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால், சுமார் 16 ஆண்டுகள் கழித்தும், அந்தப் போர்க்காலத்தில் இலங்கையின் தமிழ் சமூகத்தினர் சந்தித்த கொடுமைகள் அவ்வப்போது வெளியாகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில், கடந்த ஜூன் மாதம் மின் மயானம் அமைப்பதற்காகத் தோண்டப்பட்டபோது, ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதில், பெரும்பாலான எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையது எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் குற்றம் நடைபெற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டு அகழாய்வு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சோதனைகளின் மூலம், தற்போது வரை 141 மனித எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில், 135 பேரின் எலும்புக்கூடுகளில் உடைகள் எதுவுமில்லை எனவும், அவர்கள் அனைவரும் நிர்வாணமாகப் புதைக்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் பெரியவர்களின் ஒரேயொரு ஜோடி உடை மட்டுமே தற்போது வரை கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில், பள்ளிக்கூடப் பையுடன் கூடிய 4 முதல் 6 வயதுடைய சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் கண்டெக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அந்தப் புதைகுழியில் இருந்து குழந்தைகளின் பாட்டில், உடைகள், வளையல்கள், விளையாட்டுப் பொருள்கள் ஆகியவையும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் அடையாளம் மற்றும் அவர்களின் மரணம் குறித்த எந்தவொரு தகவலும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் என உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.

செம்மணியில், புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியைக் குறித்த செய்தி பரவியதும், உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளினால் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் மாயமான குடும்பத்தினர் அதில் இருக்கக் கூடுமோ எனும் அச்சத்தில் ஏரளாமான உள்ளூர் தமிழர்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.

முன்னதாக, தமிழ் விடுதலைப் படைகள் மற்றும் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்ட இந்தியாவின் அமைதிப்படைகள், செம்மணி பகுதியில் உள்நாட்டுப் போர்க்காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!

Summary

Items including children's milk bottles and 141 human skeletons have been excavated from a burial site discovered in the Chemmani area of ​​Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com