300 கிலோ எடையுடன் சிறைக்கைதி! ஒருநாள் பராமரிப்புச் செலவு ரூ.1 லட்சமா?

300 கிலோ எடையுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிக்கு ஒருநாள் பராமரிப்புச் செலவு பத்து மடங்கு அதிகமாம்.
சிறைக் கைதி
சிறைக் கைதி
Published on
Updated on
1 min read

ஆஸ்திரியா நாட்டில், 300 கிலோ எடையுடன், சிறையில் ஒரு கைதி அடைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சராசரி சிறைக் கைதிக்கான பராமரிப்புச் செலவை விட பத்து மடங்கு அதிகம் இவருக்கு மட்டும் செலவாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 29 வயதான கைதிக்காக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டுமா என்று, இந்த செய்தி வெளியானதிலிருந்து அந்நாட்டு மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இந்த நபரின் வீட்டில் சோதனை செய்தபோது, ஏராளமான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் இவரை வியன்னா சிறையில் அடைத்திருக்கிறார்கள். அங்கு இவரை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கோர்நெபர்க் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள்.

இந்த சிறையில் இவருக்காக சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரும்புக் கம்பிகளை வெல்டிங் செய்து பெரிய கட்டிலும், இவருக்காக கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனிக்க செவிலியரும் பணியமர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறாராம்.

இதன்படி, அந்த நாட்டின் நீதித்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், ஒரு சிறையில் இருக்கும் கைதிக்கு நாள் ஒன்றுக்கு பராமரிப்புச் செலவு என்பது ரூ.6000 ஆக இருக்கும் நிலையில், இவரைப் பராமரிக்க ரூ.1.6 லட்சம் ஆவதாகவும், (ஒரு நாளைக்கு) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி, உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சாதாரண குடிமகன், மருத்துவரைப் பார்க்க ஒருமாதத்துக்கும் மேல் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் நாடு இருக்கிறது. ஆனால், ஒரு கைதிக்கு நாட்டின் வளம் மற்றும் குடிமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதே என்று அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சிறைக் கைதிகளுக்கான செலவுகள் மற்றும் சிறைப் பராமரிப்புக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது குறித்து அந்நாட்டில் பெரிய விவாதமே வெடித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com