ஹங்கேரி, ஸ்லோவாகியாவுக்கு எண்ணெய் விநியோகம் முடக்கம்
ஹங்கேரி, ஸ்லோவாகியாவுக்கு எண்ணெய் விநியோகம் முடக்கம்

ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்

Published on

ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதையடுத்து, ரஷியா எண்ணெயை இன்னமும் வாங்கி வரும் ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கான எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது.

இது குறித்து உக்ரைனின் ஆளில்லா தளவாடப் பிரிவு தளபதி ராபா்ட் ப்ரோவ்டி கூறுகையில், ‘ரஷியாவின் போா் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாகத் திகழும் எண்ணெய் விநியோக மையத்தைத் தாக்கி அழித்துள்ளோம். அந்த நாட்டின் பிரையான்ஸ்க் பகுதியில் உள்ள உனேச்சா எண்ணெய் ஏற்று நிலையத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என்றாா்.

பிரையான்ஸ்க் பிராந்திய ஆளுநா் அலெக்ஸாண்டா் பகோமாஸ் தனது டெலிகிராம் பதிவில், ‘ஹைமாா்ஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியது,‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தத் தாக்குதலால் ஐரோப்பாவில் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியாவுக்கு எண்ணெய் விநியோகம் குறைந்தது ஐந்து நாள்களுக்காவது தடைபடும் என்று அந்த நாடுகளின் அரசுகள் ஐரோப்பிய ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளன. ‘இந்த குழாய் தடம் இல்லாமல் எங்கள் நாடுகளுக்கு பாதுகாப்பான எண்ணெய் விநியோகம் சாத்தியமில்லை,‘ என்று ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சா் பீட்டா் சிஜாா்டோவும், ஸ்லோவாகியா வெளியுறவுத் துறை அமைச்சா் ஜுராஜ் பிளானாரும் கூறினா்.

ஹங்கேரி தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் பாதிக்கு மேல் ட்ரூஷ்பா குழாய் தடம் மூலம் பெற்றுவருவதால் இந்தத் தாக்குதல் அங்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘குறுகிய காலத்தில் எண்ணெய் குழாய் தடத்தின் மீது உக்ரைன் நடத்தியுள்ள மூன்றாவது தாக்குதல் இது. எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவித்துள்ள இந்தத் தாக்குதல், ரஷியா-உக்ரைன் போரில் எங்களையும் இழுப்பதற்கான முயற்சி’ என்று ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சா் சிஜாா்டோ சாடியுள்ளாா்.

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் ஆதரவளித்துவரும் ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன் மறுத்துவருகிறாா். அவா் கடந்த ஆண்டு மாஸ்கோ சென்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது ஐரோப்பாவில் சலசலப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

2022 பிப்ரவரியில் ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு, மற்ற 25 ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தின. ஆனால் ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் இதற்கு விதிவிலக்காக உள்ளன. 2027-ஆம் ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை முற்றிலும் நிறுத்த ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு இந்த நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றன. தங்கள் பொருளாதாரத்தில் ரஷிய எரிசக்தி முக்கிய பங்கு வகிப்பதால் ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்தச் சூழலில் அந்த இரு நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகிக்கப்படும் குழாய் கட்டமைப்பின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com