பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!

பணத்துக்காக காதலனை காதலி விற்றது பற்றி...
சித்திரப் படம்
சித்திரப் படம் EPS
Published on
Updated on
2 min read

சீனாவில் 19 வயது இளைஞரை பணத்துக்காக அவரது 17 வயது காதலி மோசடி கும்பலிடம் விற்றுள்ளார்.

சுமார் 4 மாதங்கள் மோசடி கும்பலால் கொடுமைக்குள்ளான ஹுவாங் என்ற இளைஞரை அவரது பெற்றோர் இந்திய மதிப்பின்படி ரூ. 42.75 லட்சம் பணம் கொடுத்து மீட்டுள்ளனர்.

காதலனை விற்றது எப்படி?

குவாங்டாங் மாகாணத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹுவாங் தனது காதலி சோவ்வை முதன்முதலில் சந்தித்துள்ளார். இருவரும் காதலித்த நிலையில், வாடகை வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.

சோவ், தான் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பெற்றோர் வெளிநாடுகளில் முதலீடு செய்து இருப்பதாகவும் ஹுவாங்கிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, ஹுவாங் வேலை இல்லாமல் இருந்த நிலையில், மியான்மரில் தனது குடும்பத்தினர் தொழில் நடத்தி வருவதாகவும் அங்கு ஏதேனும் வேலை தேடுமாறும் சோவ் வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி குடும்பத்தினருக்கு தகவல் அளிக்காமல், சோவ்வுடன் ஹுவாங் தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.

பின்னர், தாய்லாந்து - மியான்மர் எல்லைக்கு அந்த ஜோடி சென்றுள்ளனர். அங்கு அவர்களை அழைத்துச் சென்ற ஆயுதம் ஏந்திய நபர், ஹுவாங்கின் பாஸ்போர்ட் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

அப்போது, ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதாகக் கூறி சோவ்விடம் செல்போனை பெற்ற ஹுவாங், தனது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் உடனடியாக சீன காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

செவித்திறனை இழப்பு

மியான்மரில் உள்ள கைக்சுவான் என்ற வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹுவாங்கிக்கு மொட்டை அடித்து, செல்போன் அழைப்பில் மோசடி செய்வதற்கு பயிற்சி அளித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணிநேரம் ஹுவாங்கிடம் வேலை வாங்கியுள்ளனர். செல்போன் அழைப்பில், வெற்றிகரமாக ஏமாற்றத் தவறினால் இரும்புக் கம்பிகளால் மேலாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். காதுகளில் அறைந்துள்ளனர்.

இதன் விளைவாக, ஹுவாங் தனது செவித்திறனை இழந்து, 10 கிலோவுக்கு மேல் எடை குறைந்துள்ளார்.

மீட்கப்பட்டது எப்படி?

ஹுவாங்கை ஒரு லட்சம் யுவானுக்கு (இந்திய மதிப்பின்படி ரூ. 12.22 லட்சம்) சோவ் விற்றதால், மோசடி கும்பலின் தலைவன் அவரின் பெற்றோரிடம் இழப்பீடு கோரியுள்ளார்.

மியான்மரில் உள்ள சாவோஷன் வர்த்தக சபையின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், 3.50 லட்சம் யுவான் (இந்திய மதிப்பின்படி ரூ. 42.75 லட்சம்) கொடுத்தால் ஹுவாங்கை விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பணம் செலுத்தப்பட்டு கடந்த ஜூன் மாதம் ஹுவாங் சீனாவுக்கு திரும்பியுள்ளார்.

காதலி கைது

ஹுவாங்கை விற்றுவிட்டு சீனா திரும்பியபோதே அவரது காதலி சோவ்வை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. வெளிநாடுகளின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியுள்ளதால், வழக்கின் விசாரணை மிகவும் சிக்கலானது என்று காவல்துறையினர் தெரிவித்ததாக ஹுவாங்கின் சகோதரி தெரிவித்துள்ளார்.

ஹுவாங் காதலியால் ஏமாற்றப்பட்டு மோசடி கும்பலிடம் விற்கப்பட்ட சம்பவத்தை சமூக ஊடகங்களில் அவரது சகோதரி பகிர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Summary

A 19-year-old man in China was sold to a gang of fraudsters by his 17-year-old girlfriend for money.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com