
இந்தியா மீது, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்திருக்கும் நாளில், அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமரிசித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது போல், வரி விதிப்பு என்ற ஒற்றைச் சொல்லால் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.
மற்ற நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கும் வரிக்கான பரஸ்பர நிதியை அதிகரிக்கப் போவதாகக் கூறி வந்த டிரம்ப், ஆரம்பத்தில் இந்தியாவுக்கு 25 சதவீத வரியைத்தான் வித்திருந்தார்.
ஆனால், பிறகு, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்திருந்தத கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ரஷியாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் இதர நாடுகளுக்கு அதிக வரி விதிப்பதை விட்டுவிட்டு, டிரம்ப் இந்தியாவுக்கு அதிக வரி விதித்திருக்கிறார். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு ஏற்படும், அமெரிக்க - இந்திய உறவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படும் என்று பதிவிட்டிருக்கிறார்கள்.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறியிருக்கும் ஜனநாயகக் கட்சி, இது உக்ரைன் போருக்கானது மட்டுமல்ல, பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு, இந்தியாவிலிருந்து வரும் பொருள்கள் மீது 50 சதவீத வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், ரஷியாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கான அபராதம் என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
இந்தியாவுக்கு கடுமையான அதாவது 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஷியாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனா, துருக்கி போன்ற நாடுகளக்கு 30 முதல் 15 சதவீத வரியே விதிக்கப்பட்டிருப்பது இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கா - இந்தியா இடையே நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு அடிபணிய வைப்பதற்கான அழுத்தமாகக்கூட இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.