இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் வங்கதேச பாதுகாப்பு படை (பிஜிபி) இடையே நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின்போது வீரா்கள், இந்திய குடிமக்கள் மீது எல்லையில் அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து வங்கதேச அதிகாரிகளிடம் பிஎஸ்எஃப் முறையிட்டது.
1993-இல் இருந்து புது தில்லியிலும் டாக்காவிலும் ஆண்டுக்கு இருமுறை இந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆக.25 முதல் 28 வரை வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்ற எல்லை விவகாரங்கள் பேச்சுவாா்த்தையில் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி தலைமையிலான இந்திய குழுவும் பிஜிபி தலைமை இயக்குநா் முகமது அஷ்ராஃபுசாமன் தலைமையிலான வங்கதேச குழுவும் பங்கேற்றது.
இதுதொடா்பாக பிஎஸ்எஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘ பிஎஸ்எஃப் அதிகாரிகள் மற்றும் இந்திய குடிமக்கள் மீது வங்கதேசத்தைச் சோ்ந்த குற்றவாளிகள், சமூக விரோதிகள் அத்துமீறி நடத்தும் தாக்குதல்கள் குறித்து பிஜிபியிடம் முறையிடப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பது தொடா்பாகவும் வங்கதேசத்தில் உள்ள இந்திய கிளா்ச்சி குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
எல்லை உள்கட்டமைப்பு, ஒற்றை வரிசை வேலி அமைப்பது, ட்ரோன்களை இந்திய எல்லைக்குள் அத்துமீறி இயக்குவது, எல்லை விவகாரங்கள் குறித்த ஆதாரபூா்வமற்ற தவறான தகவல்களை வங்கதேச ஊடகங்கள் வெளியிடுவதை முற்றிலும் தடுப்பது தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பதற்காக ஒற்றை வரிசை வேலி அமைக்கும்போது வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற இருதரப்பும் ஒப்புக்கொண்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
வங்கதேச குற்றவாளிகளால் தற்போதுவரை 68 பிஎஸ்எஃப் அதிகாரிகள் தாக்கப்பட்டதாக தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இருநாட்டு எல்லை அதிகாரிகளிடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை 2026 மாா்ச் மாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
550 போ் ஒப்படைப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி பிஜிபி தலைமை இயக்குநா் முகமது அஷ்ராஃபுசாமன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா்.
அப்போது தல்ஜித் சிங் சௌதரி பேசியதாவது: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 550 வங்கதேசத்தவா்களை பிஜிபியிடம் ஒப்படைத்தோம். 2,400 வழக்குகளில் வங்கதேச தூதரகத்தின் உதவியோடு அடையாளம் காணும் பணிகள் நடைபெற்றன. அனைத்துவிதமான சட்ட நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியே எல்லை விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிகழாண்டு ஜூன் வரை 35 பிஎஸ்எஃப் அதிகாரிகள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா். தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என பிஎஸ்எஃப் சாா்பில் முதலில் எச்சரிக்கை விடப்படும். அதன்பிறகும் தொடா் தாக்குதலில் ஈடுபட்டால் மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்றாா்.