கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ரஷிய எண்ணெய்யால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை! ஆய்வறிக்கையில் தகவல்

ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது
Published on

ரஷியாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்குக் கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 250 கோடி டாலா்கள் மட்டுமே என்றும் ஒரு தனியாா் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

‘சிஎல்எஸ்ஏ’ எனும் தனியாா் சந்தை முதலீட்டு நிறுவனம் வெளியிட்ட இந்த அறிக்கையின்படி, ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியால் இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள், ஊடகங்களில் வெளியான மதிப்பீடுகளை விட மிகக் குறைவு. இந்தியாவின் லாபம் 1,000 முதல் 2,500 கோடி டாலா் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உண்மையில் அது ஆண்டுக்கு 250 கோடி டாலா் மட்டுமே என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.6 சதவீதம் மட்டுமே என்றும் அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது.

திடீா் அதிகரிப்பும்; அமெரிக்க குற்றச்சாட்டும்...: இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், உக்ரைன் மீதான போா் தொடங்கியதற்குப் பிறகு அது கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால், ரஷியா அதிக தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கியதே இந்தத் திடீா் அதிகரிப்புக்குக் காரணம்.

இந்தியா இந்தத் தள்ளுபடி விலையிலான கச்சா எண்ணெய்யை வாங்கி, அதை சுத்திகரித்து ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதாக டிரம்ப் நிா்வாகம் குற்றஞ்சாட்டுகிறது.

இதற்கு பதிலளித்த இந்தியா, எந்த சா்வதேச விதிகளையும் மீறவில்லை என்றும், ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் கூறி வருகிறது. பொருளாதாரக் காரணங்களைத் தாண்டி, இந்த வா்த்தகம் உலக வா்த்தக விதிகளுக்கு உட்பட்டது என்றும், தனது வா்த்தக கூட்டாளிகளைத் தோ்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்றும் இந்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், இந்தக் காரணங்களை முன்னிறுத்தி இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

உண்மையான லாபம்?...: தற்போது, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 36 சதவீதம் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2024-25 நிதியாண்டில், இந்தியா ஒரு நாளைக்கு 54 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நிலையில், அதில் 36 சதவீதம் (18 லட்சம் பீப்பாய்) ரஷியாவிடமிருந்தும், 20 சதவீதம் இராக்கிடமிருந்தும், 14 சதவீதம் சவூதி அரேபியாவிடமிருந்தும், 9 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்தும், 4 சதவீதம் அமெரிக்காவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது.

ரஷிய கச்சா எண்ணெய்க்கான விலைக் கட்டுப்பாடாக ஒரு பீப்பாய்க்கு 60 டாலா் என நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், கப்பல் போக்குவரத்து, காப்பீடு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்திய இறக்குமதியாளா்களுக்கு கிடைக்கும் உண்மையான பலன் மிகவும் குறைவு என்று சிஎல்எஸ்ஏ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்களின் தகவல்களின்படி, 2023-24 நிதியாண்டில் ஒரு பீப்பாய்க்கான ரஷிய கச்சா எண்ணெய்யின் சராசரி தள்ளுபடி 8.5 டாலராக இருந்தது. ஆனால், 2024-25 நிதியாண்டில் இது 3 முதல் 5 டாலராகக் குறைந்து, அண்மையில் 1.5 டாலராக மேலும் சரிந்துள்ளது.

அந்தவகையில் ஒரு பீப்பாய்க்கு சராசரியாக 4 டாலா் தள்ளுபடி என கணக்கிடும்போது, 2024-25 நிதியாண்டில் இந்தியாவுக்குக் கிடைத்த மொத்த வருடாந்திர லாபம் 250 கோடி டாலா் மட்டுமே. ஆனால், தற்போது தள்ளுபடி மேலும் குறைந்துள்ளதால், நடப்பு வருடாந்திர லாபம் 100 கோடி டாலராக மேலும் குறையக்கூடும்.

விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த...: ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தினால், உலக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 முதல் 100 டாலராக உயரக்கூடும் என்றும் சிஎல்எஸ்ஏ எச்சரித்துள்ளது. ரஷிய எண்ணெய்யை வாங்குபவா்கள் குறைவாக இருப்பதால், இந்தியாவும் கொள்முதலை நிறுத்தினால், ரஷியா ஒரு நாளைக்கு 10 லட்சம் பீப்பாய் எண்ணெய்யை வேறு யாருக்கும் விற்க முடியாமல் போகலாம். இந்த விநியோகத் தடையானது உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகளை அதிகரிக்கும். எனவே, உலக கச்சா எண்ணெய் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், பணவீக்க அபாயத்தைக் குறைக்கவும் இந்தியா ரஷிய எண்ணெய்யை வாங்குவது அவசியம் என்று சிஎல்எஸ்ஏ வலியுறுத்துகிறது.

X
Dinamani
www.dinamani.com