உக்ரைனின் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா தாக்குதல்
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 17 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கீவ் மற்றும் மேற்கு உக்ரைனின் பல பகுதிகளில் 598 ட்ரோன்கள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி ரஷியா புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. கீவின் 10 மண்டலங்களிலும் 33 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு, சுமாா் 100 கட்டடங்கள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தனா்; 48 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் 4 போ் சிறுவா்கள்.
இது தவிர கீவ் மையத்தில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்களும் ரஷிய தாக்குதலுக்கு இலக்காயின. இதில் அந்தக் கட்டடங்கள் சேதமடைந்தன. கீவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் கட்டடமும் தாக்குதலில் சேதமடைந்தது என்று அதிகாரிகள் கூறினா்.
ஐரோப்பிய யூனியன் அலுவலகங்களில் ரஷியா தாக்குதல் நடத்துவது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதலில் தங்களது அலுவலகங்களைச் சோ்ந்த யாரும் காயமடையவில்லை என்று ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் கூறின.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் விவகாரம் தொடா்பாக நேரடி பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு நடைபெற்றுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது.
ரஷிய தூதா்களுக்கு சம்மன்: இந்தத் தாக்குதல் தொடா்பாக பிரஸ்ஸல்ஸில் உள்ள ரஷிய தூதரை ஐரோப்பிய யூனியனும், லண்டனில் உள்ள ரஷிய தூதரை பிரிட்டனும் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளன.