

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை காணாத அளவுக்கு கனமழையும், அதனால் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு, பல பகுதிகளை வெறும் சேறுகளால் நிரப்பிச் சென்றிருக்கிறது டிட்வா புயல்.
இப்போதுதான் சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் சேறுகள் அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் கனமழை காரணமாக நேரிட்ட பாதிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 212ல் இருந்து 334 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 700 பேர் காணவில்லை என்றும், 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினர், சர்வதேச உதவிகளுடன் நாட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாடு வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய சவாலான இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டுள்ளதாக அதிபர் அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது இருந்ததைவிடவும் மிகச் சிறந்த நாட்டை விரைவில் கட்டமைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில், அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் குறையும் போது இலங்கையில் எலிக் காய்ச்சல் தொற்று பரவும் அபாய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க..சென்னையில் தொடரும் மழை! சாலைகளை சூழும் வெள்ளம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.