

அமெரிக்காவில், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தெலங்கானாவைச் சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் சஹாஜா ரெட்டி உடுமாலா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயில அமெரிக்கா சென்ற அவர் மேற்படிப்பை முடித்துவிட்டு, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த டிச.4 ஆம் தேதி காலை பணிமுடிந்து நியூயார்க்கின் அல்பானி பகுதியில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய சஹாஜா அவரது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் அவருடன் சில இந்திய மாணவர்களும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, டிச.4 ஆம் தேதி காலை 11 மணியளவில் அவர்கள் வசித்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், சஹாஜாவுடன் வசித்து வந்த அவரது நண்பர்கள் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆனால், சஹாஜா கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அல்பானியில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சுமார் 15 மணிநேரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சஹாஜா உயிரிழந்ததாக இன்று (டிச. 6) நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவில் உயிரிழந்த சஹாஜாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, உதவ வேண்டுமென அவரது குடும்பத்தினர் தெலங்கானா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: பாக். - ஆப்கன் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! 4 பேர் சுட்டுக்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.