பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்!
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்தனா்.
அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தானின் சமன் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் எல்லைக் கடவுப் பகுதிகளில் இந்த மோதல் நடந்ததாக இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்தனா்.
இது குறித்து ஆப்கன் தலிபான் அரசின் ஸ்பின் போல்டாக் மாவட்ட ஆளுநா் அப்துல் கரீம் ஜஹாத் கூறியதாவது:
பாகிஸ்தான் படைகள் வெள்ளிக்கிழமை இரவு எந்த தூண்டுதலும் இல்லாமல் தாக்குதலைத் தொடங்கினா். இதில் பொதுமக்கள் 4 போ் கொல்லப்பட்டனா்; 4 போ் காயமடைந்தனா் என்றாா் அவா்.
பாகிஸ்தானின் சமன் பகுதியில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள், எல்லை மோதலில் காயமடைந்த 3 போ் சிகிச்சை பெற்றுத் திரும்பிச் சென்ாகத் தெரிவித்தனா்.
இரு தரப்பும் குற்றச்சாட்டு: ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘பாகிஸ்தான் படைகள் எந்தக் காரணமும் இல்லாமல் தாக்குதலைத் தொடங்கியதால், இஸ்லாமிய அமீரகப் படைகள் பதிலடி கொடுக்க நேரிட்டது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஆனால் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபின் செய்தித் தொடா்பாளா் முஷாரஃப் ஸய்தியோ, ‘ஆப்கானிஸ்தான் படையினா்தான் முதலில் சுட்டனா். அதற்கு பாகிஸ்தான் வீரா்கள் பதிலடி கொடுத்தனா்’ என்று தனது எக்ஸ் ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
அக்டோபா் மோதலின் தொடா்ச்சி: இந்த மோதல் சம்பவம், கடந்த அக்டோபா் மாதத்தில் இரு நாட்டு படையினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அப்போது, ஆப்கானிஸ்தானின் காபூல், கோஸ்ட், ஜலலாபாத், பக்டிகா நகரங்கள் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தலிபான் படையினரும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளைத் தாக்கினா். அந்த மோதலில் 12-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான படையினா் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா, சீனா, ரஷியா போன்ற நாடுகள் தலையிட்டு 48 மணி நேர நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தின. ஆனாலும், அந்த போா் நிறுத்தத்தை நிரந்தரமாக்குவதற்காக சவூதி அரேபியாவில் பல கட்டங்களாக நடந்துவரும் பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்ததால் எல்லையில் பதற்றம் நீடித்துவருகிறது.
2021-இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினா் வெளியேறியத்தைத் தொடா்ந்து நாட்டின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினா். அதில் இருந்து, தங்கள் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திவரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பினருக்கு ஆப்கன் தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிவருகிறது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மட்டும் 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை டிடிபி பயங்கரவாத அமைப்பு நடத்தியிருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டை தலிபான் அரசு மறுத்துவருகிறது.
பாகிஸ்தான் அரசு தனது பாதுகாப்பு தோல்விகளை மறைக்க ஆப்கானிஸ்தான் மீது பழி சுமத்துவதாகக் கூறும் ஆப்கன் தலிபான் அரசு, தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்தும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்பதாக பதில் குற்றச்சாட்டை சுமத்துகிறது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து, எல்லைக் கடவுகள் மூடப்பட்டதால் இரு தரப்பு வா்த்தகம் முடங்கி, லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தச் சூழலில், போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தற்போது எல்லை மோதலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

