

அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷியாவும் உக்ரைனும் சரமாரி வான் வழி தாக்குதல்களைத் தொடர்ந்ததால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வெள்ளிக்கிழமை(டிச. 12) நள்ளிரவில் ரஷியாவிலிருந்து உக்ரைனில் மின்சார உற்பத்தி உள்பட ஆற்றல் துறைக்கான உள்கட்டமைப்புகளையும் துறைமுகங்களையும் குறிவைத்து ட்ரோன்களாலும் ஏவுகணைகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் உக்ரைனில் சில பகுதிகள் மின்சார விநியோகம் தடைபட்டு அப்பகுதிகளைச் சேர்ந்தோர் இருளில் தவித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்களை விவரித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி, ரஷியாவிலிருந்து வெள்ளிக்கிழமை(டிச. 12) நள்ளிரவில் 450 ட்ரோன்கள் மற்றும் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் குறிப்பிட்டார். ரஷியாவின் தாக்குதல்களால் கிரோவோராட், மைகோலைவ், ஒடேசா, சுமி, கார்கிவ், கெர்சன், செர்னிஹிவ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருளில் பரிதவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷியாவில் உக்ரைன் தாக்குதல்:
ரஷியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சாரடோவ் பகுதியில் உக்ரைன் நடத்திய வான் வழி தாக்குதல்களால் குடியிருப்புப் பகுதிகள் பலத்த சேதமடைந்ததாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களில் 41 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தத் தாக்குதல்களில் ரஷியாவில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு?:
இதனிடையே, அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், ரஷிய அதிபர் மாளிகையின் ஆலோசகர் யூரி உஷாகோவ் வெள்ளிக்கிழமை(டிச. 12) நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களுக்கு முன்னர் பேசுகையில், ‘நான்காண்டுகளைக் கடந்து விட்ட உக்ரைன் - ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டாலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷிய பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்பு பணிகளைத் தொடருவர்’ என்று தெரிவித்தார். எனினும், ரஷியாவின் இந்த நிலைப்பாட்டை உக்ரைன் ஏற்றுக் கொள்வதாக இல்லை என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.