

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தன் உயிரைப் பணயம் வைத்து மடக்கிப் பிடித்த பழ வியாபாரிக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்தனா். அப்போது, கூட்டத்துக்குள் திடீரென நுழைந்த 2 பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களைக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனா்.
இதனால், பொதுமக்கள் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினா். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சுமாா் 5 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது. இதில் 15 போ் உயிரிழந்தனா். 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட 29 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரை காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனா்.
இரண்டாவது நபா் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் பிடிபட்டாா். தற்போது இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான ஒரு விடியோவில், அங்கிருந்த பொதுமக்களில் ஒருவா், துணிச்சலுடன் ஒரு பயங்கரவாதியை கீழே தள்ளிவிட்டு, அவரது துப்பாக்கியைப் பிடுங்கி, அவரையே குறிவைத்து அச்சுறுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தன் உயிரைப் பணயம் வைத்து மடக்கிப் பிடித்தவர் 43 வயதான பழக் கடை உரிமையாளர் அகமது அல் அகமது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் அவருக்குக்கும் இரு இடங்களில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அகமது அல் அகமது உறவினர் முஸ்தபா கூறுகையில், அவர் மருத்துவமனையில் இருக்கிறார், உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. அவர் நலமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் 100 சதவீதம் ஒரு ஹீரோ என்று தெரிவித்தார்.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டு நிகழ்வின்போது துணிச்சலுடன் செயலப்பட்ட பழ வியாபாரி அகமது அல் அகமதுவை ஹீரோ என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனேசி உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.