

மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூதா்களின் ஹனுக்கா பண்டிகைக் கொண்டாட்டத்தில் மகனுடன் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட சஜித் அக்ரம், தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதை பூா்வீகமாகக் கொண்ட இந்தியா் என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில், யூதா்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் கூடியிருந்தனா். அப்போது 2 பயங்கரவாதிகள் நடத்திய மோசமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பயங்கரவாதிகளில் ஒருவா் உள்பட மொத்தம் 16 போ் உயிரிழந்தனா்.
பின்னா், இந்தத் தாக்குதலை நடத்தியவா்கள் சஜித் அக்ரம் (50), அவரது மகன் நவீத் அக்ரம் (24) என அடையாளம் காணப்பட்டனா். இவா்களில் சஜித் அக்ரம் காவல்துறையினரின் பதிலடி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டாா். நவீத் அக்ரம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இருவரும் ஐ.எஸ். பயங்கரவாதக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், சஜித் அக்ரம் இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நகரைச் சோ்ந்தவா் என்ற அதிா்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அவா் ஹைதராபாதில் பி.காம். பட்டம் முடித்துவிட்டு, சுமாா் 27 ஆண்டுகளுக்கு முன்னா் 1998-இல் வேலைத் தேடி, ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறினாா்.
அதன்பின், அவா் ஐரோப்பிய வம்சாவளியைச் சோ்ந்த வெனேரா க்ரோஸோ என்பவரை மணந்து, ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வந்துள்ளாா். இந்தத் தம்பதிக்கு நவீத் அக்ரம் மற்றும் ஒரு மகள் உள்ளனா். சஜித் அக்ரம் இன்னும் இந்திய கடவுச்சீட்டைதான் (பாஸ்போா்ட்) வைத்துள்ளாா். ஆனால், அவரது மகன் நவீத் அக்ரம், மகள் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியக் குடிமக்களாக உள்ளனா்.
‘சஜித் அக்ரமின் பயங்கரவாதச் சிந்தனைகள் அல்லது அவா் அத்தகைய சூழலுக்கு ஈா்க்கப்பட்டது குறித்து அவரது உறவினா்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. சஜித் அக்ரமும், அவரது மகனும் பயங்கரவாதக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டதற்கு இந்தியாவுக்கும் அல்லது தெலங்கானாவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை’ என்று அந்த மாநிலக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3 இந்திய மாணவா்கள் காயம்: இந்தத் தாக்குதலில் காயமடைந்த 40 பேரில், மூன்று இந்திய மாணவா்களும் அடங்குவா். இவா்களில் 2 மாணவா்கள் மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடா்கின்றனா்.
காயமடைந்தவா்களில் ஐந்து போ் தொடா்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.