

அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவு: ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், சிரியா உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைவிதித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்கவும், அமெரிக்கா வருவோரின் கட்டுப்பாடுகளை விரிவுப்படுத்துதல் மற்றும் வலுபடுத்துதல் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதனால், அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலையும் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நீட்டித்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா, மியான்மர் உள்பட 20 நாடுகள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால், அமெரிக்கா தடைவிதித்த நாடுகளில் பட்டியல் 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தடை வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சிரியா, புர்கினோ ஃபாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், லாவோஸ், செய்ரா லியோன், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடோரியல் கியானா, ஹைதி, எரித்திரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை நடைபெறும் நிலையில், அதில் பங்கேற்கும் நாடுகளான நைஜீரியா, ஐவரிகோஸ்ட், செனகல் உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் முழு தடைவிதித்துள்ளார். இதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிரம்ப்பின் தடையால் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், அங்கோலா, ஆண்டிகுவா, பார்புடா, பெனின், டொமிக்கா, காபன், காம்பியா, மாலவி, மௌரிடானியா, தான்சானியா, ஜாம்பியா, ஜிம்பாப்வே, பாலினேசிய நாடான டோங்காவுக்கு அதிபர் டிரம்ப் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். புருண்டி, கியூபா, டோகோ மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.
அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஊடுருவல் நடைபெறுவதாகவும், அதனை அடியோடு அழிக்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.
அமெரிக்காவில் போதைப் பொருள் அதிகரித்ததற்கும், குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு வெளிநாட்டவர்களின் வருகையையும் அவர் குறிப்பிட்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த வாரம் காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவரை காவல் துறை கைது செய்தது. இதன் விளைவாக இந்தப் பயண தடைகள் நீடிக்க நிர்வாகம் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. இது மிகவும் நியாயமற்றது என்றும் பலர் அதிபர் டிரம்ப் மீது தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.