

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது வியாழக்கிழமை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான், எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி வளைகுடா நாடான ஓமனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா - ஓமன் இடையேயான கடந்த 2023 நவம்பரில் தொடங்கிய தடையற்ற ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 2025 இல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தியா - ஓமன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருநாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்தியா-ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிப்பதாகவும், மாண்ட்வி மற்றும் மஸ்கட்டை அரபிக் கடலுக்கு அப்பால் இணைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்சார் மரபின் வாரிசுகளாக வர்த்தகத் தலைவர்கள் திகழ்வதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியில் பயணத்தையொட்டி, மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலும் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். வர்த்தக உச்சி மாநாட்டில் இரு நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு முன்னதாக, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அல் பரக்கா அரண்மனையில் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.
ஓமன் நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘ஓமனின் முதல்தர விருது (The First Class of the Order of Oman - தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன்) வழங்கி மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் கௌரவப்படுத்தினார்.
இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29 ஆவது வெளிநாடுகளின் உயரிய விருதாகும். மேலும், ராணி எலிசபெத், நெதர்லாந்து ராணி மாக்ஸிமா, நெல்சன் மண்டேலா, பேரரசர் அகிஹிட்டோ மற்றும் ஜோர்டானின் மன்னர் அப்துல்லா ஆகியோருக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தின் ஒருபகுதியாக நேற்று எத்தியோப்பியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.