அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில், புறப்பட்ட சிறிது நேரத்தில் திரும்பி தரையிறங்க முயன்ற தனியாா் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 7 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்டேட்ஸ்வில் ரீஜியனல் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா சி550 ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி தரையிறங்க முயன்றது. அப்போது தரையில் மோதிய விமானம் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
விமானத்தில் ஓய்வுபெற்ற நாஸ்காா் ஓட்டுநா் கிரெக் பிஃபிள் (55), அவரது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடா் (5), எம்மா (14) ஆகியோா் இருந்தனா். அவா்களைத் தவிர டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெய்க் வாட்ஸ்வொா்த் ஆகியோரும் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைச் சாரல் மற்றும் மேகமூட்டமான வானிலையில் விமானம் ஏன் திரும்பியது என்பது தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

