

ஈரான் நாட்டில், இஸ்ரேலின் உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் உர்மியா நகரத்தில், ராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்தபோது அகில் கேஷவர்ஸ் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் கட்டமைப்புகள் குறித்த செய்திகளை இஸ்ரேலின் மொஸாத் உளவாளிகளிடம் அவர் பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இத்துடன், இஸ்ரேலுக்காக ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்பட ஏராளமான நகரங்களில் 200-க்கும் அதிகமான உளவுப்பணிகளை அவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்செயலுக்காக, அகில் கேஷவர்ஸுக்கு ஈரானின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இன்று (டிச. 20) காலை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரில், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட 1,100 பேர் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், இஸ்ரேலுக்காக உளவுப்பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் இதுவரை 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.