

துருக்கியில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில், லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கி அரசுடன் உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள லிபியா ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், தலைநகர் அங்காராவுக்குச் சென்றிருந்தனர்.
துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தவுடன், லிபியா அதிகாரிகள் அனைவரும் தனியார் விமானம் மூலம் அங்காராவில் இருந்து நேற்று (டிச. 23) இரவு 8.30 மீண்டும் லிபியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், லிபியா அதிகாரிகள் பயணித்த விமானம், அங்காரா நகரத்துக்கு தெற்கே சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹேமனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது அலி அஹமது அல்- ஹதாத் மற்றும் அவருடன் பயணித்த 4 அதிகாரிகள் உள்பட 8 பேர் பலியானதாக, லிபியாவின் பிரதமர் அப்துல்-ஹமீத் டிபீபா அறிவித்துள்ளார்.
முன்னதாக, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க விமானி துருக்கி அதிகாரிகளிடம் அனுமதி கோரியதாகவும், மீண்டும் அந்த விமானத்தை அங்காராவில் தரையிறக்க அனுமதி வழங்கி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதற்குள் ரேடாரில் இருந்து மாயமான விமானம் ஹேமனாவில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது. இந்த விபத்து குறித்து துருக்கி அரசுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ள லிபியாவின் அதிகாரிகள் அங்காராவுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹாதியை கொன்றது யூனுஸ் அரசு! சகோதரர் குற்றச்சாட்டால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.