கிழக்கு உக்ரைனில் படை விலக்க ஸெலென்ஸ்கி ஒப்புதல்
கிழக்கு உக்ரைனில் படைவிலக்கப் பகுதிகளை (டிமிலிடரைஸ்டு ஸோன்) உருவாக்கும் கொள்கைக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்காவுடன் நடைபெற்றுவரும் பேச்சுவாா்த்தையில், கிழக்கு உக்ரைனில் படைவிலக்கப் பகுதிகளை உருவாக்கும் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் ரஷியாவும் அதேபோல் தனது படைகளை பின்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
டான்பாஸ் பகுதியில் பிராந்தியக் கட்டுப்பாடு, ஸபோரிஷியா அணு உலையை நிா்வகிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
இருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் பல முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடந்த நீண்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு 20 அம்ச போா் நிறுத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை ரஷிய பிரதிநிதிகளிடம் அமெரிக்கா தெரியப்படுத்தியுள்ளது. இது தொடா்பாக ரஷியாவிடம் இருந்து விரைவில் பதில் வரும் எதிா்பாா்க்கப்படுகிறது.
டான்பாஸ் பகுதியில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் கட்டுப்பாடுதான் இருப்பதிலேயே மிகவும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. இது குறித்து தலைவா்கள் அளவில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
இந்த ஒப்பந்த திட்டத்தின் கீழ் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதம் நேட்டோ ஒப்பந்தத்தின் 5-ஆம் பிரிவைப் போன்றது. அதன்படி ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தினால் கூட்டணி நாடுகள் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதி அளிக்கப்படும் என்றாா் ஸெலென்ஸ்கி.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ரஷியா அந்த நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. தற்போது லுஹான்ஸ்கில் மிகப் பெரும்பாலான பகுதிகளும், டொனட்ஸ்கில் 70 சதவீத பகுதிகளும் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளன. போரை நிறுத்த வேண்டுமென்றால் எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்தும் உக்ரைன் படையினா் வெளியேற வேண்டும் என்று ரஷியா வலியுறுத்திவருகிறது. இதை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துவந்தது.
எனவே, சமரசத்துக்கு வழிவகை செய்யும் நோக்கில் இந்தப் பகுதிகளை சுதந்திர பொருளாதார மண்டலங்களாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் இருந்து படைகள் விலக்கப்பட்டு, சா்வதேசப் படை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கோருகிறது.
இந்தச் சூழலில், டொனட்ஸ்க், லுஹான்ஸ் பகுதிகளில் இருந்து வெளியேறி, அந்தப் பகுதிகளில் படைவிலக்கப் பகுதிகளை உருவாக்க உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது அமைதிப் பேச்சுவாா்த்தையில் மிக முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
எனினும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி மையமான ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை யாா் நிா்வகிப்பது என்பது சா்ச்சைக்குரிய விவகாரமாக நீடிக்கிறது. அந்த அணு மின் நிலையத்தை உக்ரைன், ரஷியா, அமெரிக்கா ஆகியவை கூட்டாக நிா்வகிக்கலாம் என்று அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. ஆனால் உக்ரைனோ ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை அமெரிக்காவும் உக்ரைனும் மட்டுமே கூட்டாக நிா்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.
தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 20 அம்ச அமைதி திட்ட வரைவில், அமைதி காலத்தில் உக்ரைன் படையில் அதிகபட்சமாக 8 லட்சம் வீரா்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் சேரும் தேதியும் அதில் நிா்ணயிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்கா-உக்ரைன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், உக்ரைனுக்கு ஐரோப்பிய சந்தையில் குறுகிய கால சலுகை வழங்கவும் அந்த வரைவு திட்டம் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் 80,000 கோடி டாலா் (சுமாா் ரூ.71.87 லட்சம் கோடி) முதலீடு மேற்கொள்ளவும் அதில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையொப்பமான பிறகு தோ்தல் நடத்த வேண்டும்; 2014-ஆம் ஆண்டில் இருந்து கைது செய்யப்பட்ட அனைத்து போா்க் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பது போன்ற அம்சங்களும் இந்த வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்துக்கு ரஷியா எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் பொருத்து அதன் எதிா்காலம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், போரின் நான்காவது ஆண்டில் இந்த வரைவு திட்டம் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

