

விந்துணுவை தானம் பெற்று, ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றால், தன்னுடைய சொத்தில் சம பங்கு வழங்கப்படும் என்று டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் இளம் பெண்களுக்கு அதிர்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
விந்தணுவை தானமாகப் பெற்று ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கருவுற்றால் சிகிச்சை செலவையும் தானே ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ரூ.1.52 லட்சம் கோடி சொத்தில், பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமாக பங்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் 41 வயது பாவெல் அறிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு, தான் அளித்த விந்தணு தானம் மூலம் சுமார் 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனக்கு பிறந்திருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்த பாவெல், தற்போது 100 குழந்தைகள் போதாது என்றும், மேலும் தன்னுடைய விந்தணுவை தானம் பெற்று குழந்தைபெற்றுக் கொள்ள விரும்பும் இளம்பெண்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அவர் அறிவித்துள்ளார்.
அதாவது, 37 வயதுக்குள்பட்ட பெண்கள் இவரது சலுகையைப் பெறலாம். சட்ட சிக்கல்களைத் தவிர்க்க பெண்களுக்கு திருமணமாகியிருக்கக் கூடாது, நன்கு படித்த, ஆரோக்கியமான பெண்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என்று, ஒரு மருத்துவமனை இணையதளத்தில் பாவெல் துரோவ் புகைப்படத்துடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தனக்குப் பிறந்த குழந்தைகள் அடையாளம் காணும் வகையில், தன்னுடைய மரபணு சோதனையை பொது வெளியில் வெளியிட்டு, அதன் மூலம் தனக்குப் பிறந்த குழந்தைகள் அடையாளம் காணவும் துரோவ் திட்டமிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் அவர் ஒரு காரணமும் கூறியிருக்கிறார். அதாவது ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதால், சமூக பொறுப்புணர்வோடு, தான் இந்த தானத்தை செய்து வருவதாகவும் பெருமிதத்தோடு கூறுகிறார் துரோவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.