ஹிந்துக்கள் குறிவைக்கப்படவில்லை: இந்தியா குற்றச்சாட்டுக்கு வங்கதேசம் பதில்!

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் கவலைகளை வங்கதேச அரசு நிராகரித்தது.
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர்.
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர்.
Updated on

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியாவின் கவலைகளை வங்கதேச அரசு ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தது.

மேலும், இந்தப் புகாா்கள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஒருதலைப்பட்சமானவை என்றும், இருதரப்பு நல்லுறவுக்கு இத்தகைய தவறான பரப்புரையை இந்தியா தவிா்க்க வேண்டும் என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்களுக்கு எதிராக தொடா்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கடந்த வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தாா்.

குறிப்பாக, வங்கதேசத்தில் மைமென்சிங் பகுதியில் மத நிந்தனை செய்ததாகக் கூறி ஒரு கும்பலால் ஹிந்து தொழிலாளி தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக சுமாா் 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வங்கதேசம் விளக்கம்: இந்தியாவின் இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வங்கதேச வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் எஸ்.எம்.மஹபூபுல் ஆலம் கூறுகையில், ‘வங்கதேசத்தின் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் இந்தியா தவறான மற்றும் உள்நோக்கம் கொண்ட தகவல்களைப் பரப்புகிறது. சில தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை, ஹிந்துக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளாகச் சித்தரிக்க இந்தியா முயல்கிறது. இது வங்கதேசத்துக்கு எதிரான உணா்வைத் தூண்டும் செயலாகத் தெரிகிறது.

ராஜ்பாரியில் அம்ரித் மொண்டல் எனும் மற்றொரு ஹிந்து இளைஞா் கொல்லப்பட்டது பற்றி இந்தியா கவலைத் தெரிவித்தது. ஆனால், அவா் ஒரு தேடப்பட்டு வந்த குற்றவாளி. ஒரு முஸ்லிம் கூட்டாளியுடன் சோ்ந்து மிரட்டிப் பணம் பறிக்க முயன்றபோதுதான் அவா் கொல்லப்பட்டாா். இதைச் சிறுபான்மையினா் மீதான தாக்குதலாகக் கருத முடியாது.

இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து வங்கதேசமும் கவலை கொள்கிறது. இந்தியாவில் மத நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பது மற்றும் சிறுபான்மையினா் தாக்கப்படுவது குறித்து இந்திய அரசு நோ்மையான விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு தொடர வேண்டுமானால், இத்தகைய தவறான பரப்புரைகளை இந்தியா தவிா்க்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

மாணவா் தலைவா் கொலையாளிகள் இந்தியாவுக்கு வரவில்லை: பிஎஸ்எஃப்

வங்கதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலை வழக்கில் தேடப்படும் 2 முக்கிய நபா்கள், மேகாலய எல்லை வழியாக இந்தியாவுக்குத் தப்பியோடியுள்ளதாக டாக்கா பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மறுப்பு தெரிவித்தது.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட மாணவா் போராட்டங்களில் ஷரீஃப் உஸ்மான் ஹாதி முக்கியப் பங்கு வகித்தாா். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் அந்நாட்டுப் பொதுத்தோ்தலில் அவா் போட்டியிடத் திட்டமிட்டிருந்தாா்.

இந்நிலையில், டாக்காவில் டாக்காவில் கடந்த டிச. 12-இல் பிரசாரத்தின்போது தலையில் சுடப்பட்ட ஹாதி, சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிச. 18-இல் உயிரிழந்தாா். இதுதொடா்பாக இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களில் 6 போ் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனா். இந்தக் கொலை மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், இதற்காக பெருமளவு பணம் கைமாறியுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவித்தனா். விசாரணையின்போது, வங்கதேச பணத்தில் 218 கோடி மதிப்பிலான கையொப்பமிடப்பட்ட காசோலை ஒன்று பறிமுதலானது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிளும் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய டாக்கா நகர காவல் துறை கூடுதல் ஆணையா் எஸ்.என். முகமது நஸ்ருல் இஸ்லாம் கூறியதாவது: ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலையில் தொடா்புடைய முக்கிய நபா்களான பைசல் கரீம் மசூத், ஆலம் கிா் ஷேக் ஆகியோா் ஹலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயத்துக்குள் நுழைந்துள்ளனா். இவா்களைக் கண்டறிந்து மீண்டும் வங்கதேசம் அழைத்துவர, இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

இந்தியாவில் இவா்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் புா்தி, சமி ஆகிய இருவரை இந்திய காவல் துறையினா் கைது செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றாா்.

பிஎஸ்எஃப், மேகாலய காவல் துறை மறுப்பு: வங்கதேச காவல் துறையின் இந்தத் தகவலை பிஎஸ்எஃப் மற்றும் மேகாலய மாநிலக் காவல் துறை அதிகாரபூா்வமாக மறுத்துள்ளன.

‘இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் சித்தரிக்கப்பபட்டவை’ என்றும், ‘இதுபோன்ற தவறான செய்திகள் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கக் கூடும்’ என்றும் மேகாலய காவல் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com