

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகேயுள்ள நூா் கான் விமானப்படை தளம் இந்தியாவால் தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளாா்.
அதேபோல இந்தியாவுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு எந்த நாட்டிடமும் பாகிஸ்தான் கோரவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமின்றி அந்நாட்டு விமானப்படை தளங்களையும் இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் இப்போது அதனை ஒப்புக் கொண்டுள்ளது.
லாகூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக இஷாக் தாா் மேலும் கூறியதாவது:
36 மணி நேரத்தில் சுமாா் 80 ட்ரோன்களை இந்தியா ஏவியது. அவைத் தடுத்து அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் மே 10-ஆம் தேதி அதிகாலையில் நூா் கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தி இந்தியா பெரிய தவறைச் செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் மிகத்தீவிரமாக பதிலடி அளித்தது.
அதே மே 10-ஆம் தேதி காலை 8.17 மணிக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ என்னைத் தொடா்பு கொண்டு, ‘போரை நிறுத்த இந்தியா தயாராக உள்ளது. நீங்கள் அதற்கு ஒப்புக் கொள்கிறீா்களா?’ என்று கேட்டாா். நாங்கள் போருக்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் பதிலளித்தேன்.
அதே நேரத்தில் போா் நிறுத்தம் குறித்து இந்தியாவுடன் பேச சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரான இளவரசா் ஃபைசல் என்னிடம் அனுமதி கேட்டாா். அதைத் தொடா்ந்து போா் நிறுத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு நாங்களாக எந்த நாட்டிடமும் கோரவில்லை.
முன்னதாக, மே 7-ஆம் தேதி பல இந்திய விமானப் படை விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு கண்டு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றாா்.
இந்திய விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதாகக் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் அவா் அளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.