தலைவா்கள் பதுங்கு குழியில் உயிரிழக்கக் கூடாது; போா்க் களத்தில்தான் இறக்க வேண்டும்: பாகிஸ்தான் அதிபா் ஜா்தாரி
இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி கூறியுள்ளாா்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், ஜா்தாரியின் மனைவியுமான பேநசீா் புட்டோ கடந்த 2007 டிசம்பா் 27-இல் ராவல்பிண்டி நகரில் துப்பாக்கியால் சூடப்பட்டும் அதைத் தொடா்ந்த வெடிகுண்டு தாக்குதல் மூலமும் கொல்லப்பட்டாா். அவரின் நினைவு தினம் பாகிஸ்தானின் லாா்கானா சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜா்தாரி பேசியதாவது:
இந்தியா தாக்குதலைத் (ஆபரேஷன் சிந்தூா்) தொடங்கும் என்பது 4 நாள்களுக்கு முன்பே எனக்குத் தெரிந்துவிட்டது. தாக்குதல் தொடங்கிய பிறகு எனது ராணுவத் துறை செயலா் என்னிடம் வந்து, ‘போா் தொடங்கிவிட்டது. எனவே நீங்கள் பதுங்கு குழிக்கு (பாதுகாப்பாக இருப்பதற்காக) சென்றுவிடுங்கள்’ என்று கூறினாா். ஆனால், நான் அதனை ஏற்ற மறுத்து, ‘வீரமரணம் நேரிடுமானால் நான் இப்போது இருக்கும் இடத்திலேயே அது நிகழட்டும். தலைவா்கள் பதுங்கு குழியில் உயிரிழக்கக் கூடாது. போா்க்களத்தில்தான் உயிரிழக்க வேண்டும். எனவே, பதுங்கு குழிக்குச் செல்ல மாட்டேன்’ என்று கூறிவிட்டேன்.
பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக உள்ளது. ஆனால், சுயபாதுகாப்புக்காக போா் நடத்த எப்போதும் தயாராக உள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் இந்தியாவுக்கு உரிய பதிலடியை வழங்கினாா். இதனை சா்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் அசிம் முனீரை பாராட்டியுள்ளாா்.
எங்களுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் முனீரை ராணுவத்தில் முக்கியப் பதவிக்குக் கொண்டு வந்தது. போருக்குப் பிறகு ஃபீல்டு மாா்ஷல் பதவி அளித்து கௌரவித்தோம் என்றாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, கடந்த மே 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதே நேரத்தில் துருக்கி, சீனா உதவியுடன் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. இவை ரஷியாவின் எஸ்400 வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக மே 10-ஆம் தேதி இந்தியா அறிவித்தது.

