முதல் பெண் பிரதமர்... 17 ஆண்டு சிறை.. கொல்லப்பட்ட பிரதமர் மனைவி.. யார் இந்த கலீதா ஜியா?

மறைந்த வங்கதேச முன்னாள் பெண் பிரதமர் கலீதா ஜியாவைப் பற்றி...
கணவர் ஜியாவுர் ரஹ்மானுடன் கலீதா ஜியா.
கணவர் ஜியாவுர் ரஹ்மானுடன் கலீதா ஜியா.
Updated on
2 min read

வங்கதேச முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு காலமானார்.

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, நீண்டநாள் உடல்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தலைநகர் டாக்காவில் எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கலீதா ஜியாவுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது, அதையடுத்து நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்கும் நோக்கில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் நீண்டநாள்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தார்.

சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்ததால் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு, அவருக்கு இதயக் குழாயிலும் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டது. டிச. 11 அன்று அவருக்கு வென்டிலேட்டரில் சுவாசத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திங்கள்கிழமை இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதிநவீன சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்ல கத்தாரில் இருந்து ஒரு சிறப்பு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஆனால், எவர்கேர் மருத்துவமனையில் இருந்து டாக்கா விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கு மருத்துவ வாரியம் அனுமதி வழங்கவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் பிறந்த கலீதா ஜியா, இந்தியப் பிரிவினையின் போது குடும்பத்தினருடன் வங்கதேசத்துக்குக் குடிபெயர்ந்தனர். இவரது தந்தை ஒரு தேனீர் வியாபாரி.

தனது 15 வது வயதில் ராணுவ வீரரான ஜியாவுர் ரஹ்மான் என்பவரை கலீதா ஜியா திருமணம் செய்துகொண்டார். 1971 ஆம் ஆண்டு மேற்கு பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்ற ஜியாவுர் ரஹ்மான், வங்கதேச சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார். 1977 ஆம் ஆண்டில் அதன்பின்னர், தன்னை ராணுவத் தளபதியாக அறிவித்துக்கொண்ட அவர், தன்னை வங்கதேசப் பிரதமராகவும் அறிவித்துக் கொண்டார்.

வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவரான கலீதா ஜியா, மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார். முதல்முறையாக 1991 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்று 1996 வரை ஆட்சியிலிருந்தார். அதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரையிலும் பிரதமராகப் பதவி வகித்தார்.

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனசீர் பூட்டோவுக்குப் பிறகு ஒரு முஸ்லீம் நாட்டை வழிநடத்திய இண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் கலீதா பெற்றுள்ளார்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் மாணவர் போராட்டம் காரணமாக கடந்தாண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலீதா ஜியா, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நீரிழிவு, இதயம், நுரையீரல் தொற்று, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது.

இடைக்கால பிரதமரான முகமது யூனுஸ் தலைமையிலான அரசு அமைந்த பின் சிறையில் இருந்து விடுக்கப்பட்டார். இருப்பினும், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் கலீதா ஜியா.

வங்கதேசத்தின் ஆறாவது பிரதமரான கலீதா ஜியா, 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவரான ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்துகொண்டார்.

ஜியாவுர் ரஹ்மான் 1977 ஆம் ஆண்டு வங்கதேச பொதுமக்கள் கட்சியை தோற்றுவித்தார். அதன்பின்னர், 1981 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார் ஜியாவுர் ரஹ்மான். இதனால், 1984 ஆம் ஆண்டில், ஜியா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, திங்கள்கிழமை அன்று, கலீதா ஜியா சார்பாக போகுரா-7 தொகுதிக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் டாக்கா திரும்பிய அவரது மகன் தாரிக் ரஹ்மான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர்களில் தாரிக் ரஹ்மானுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பிய தாரிக் ரஹ்மான் எவர்கேர் மருத்துவமனையில் தனது நோய்யால் பாதிக்கப்பட்ட தாயாரைச் சந்தித்து அவருடன் 2 மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிட்டார்.

போக்ரா-6 தொகுதி ஒருகாலத்தில் கலீதா ஜியாவின் கோட்டையாகக் கருதப்பட்டது. கலீதா ஜியா, டாக்கா-17 மற்றும் போக்ரா-6 ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார். ஆனால், 2023 இல் அவாமி லீக் தலைவர் ரகேபுல் அஹ்சன் ரிபு வெற்றி பெற்றார்.

1996 இல் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து பதவியேற்றார். ஆனால், அதிகளவிலான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களால் ஒரே மாதத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து 2001 இல் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2006-ல் தேர்தலுக்கு முன்னதாகவே பதவி விலகினார். 2007-ல் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

70 சதவிகிதம் படிப்பறிவு இல்லாத நாட்டில், கலீதா ஜியாவின் வங்கதேச அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. தொடக்கப்பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்விய அறிமுகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து 10 வகுப்பு வரையிலான பெண்களுக்கு இலவசக்கல்வி, பள்ளி மாணவர்களுக்கான உணவுத் திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் கலீதா. மேலும், அரசுப் பணியில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை 27 ல் இருந்து 30 ஆகவும் உயர்ந்தியிருந்தும் நினைவுகூரத்தக்கது.

கணவர் ஜியாவுர் ரஹ்மானுடன் கலீதா ஜியா.
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!
Summary

Khaleda Zia, who has died at the age of 80, was Bangladesh's first female prime minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com