

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் நாளை அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா, உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்டநாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (டிச. 30) காலை 6 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வங்கதேச இடைக்கால அரசுடன் கலீதா ஜியாவின் கட்சியினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில், கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு நாளை பிற்பகல் வங்கதேச நாடாளுமன்ற வளாகத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்று அவரது கணவரும் வங்கதேச முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் இடைக்கால ஆலோசகர் முஹம்மது யூனுஸ், தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு வெளியிட்ட செய்தியில், கலீதா ஜியாவின் மறைவுக்கு தேசியளவில் 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், நாளை வங்கதேசம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கலீதா ஜியாவின் கணவரும் வங்கதேசத்தின் 6 ஆவது அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் கடந்த 1981 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.