

வெனிசுவேலா நாட்டில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி தகர்த்ததாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்திற்கு, வெனிசுவேலாதான் காரணம் எனக் கூறி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
வெனிசுவேலாவைச் சேர்ந்த டிரென் டே அராகுவா எனும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்திய மிகப் பெரிய துறைமுகப் பகுதியை, கடந்த சில நாள்களுக்கு முன்பு வான்வழித் தாக்குதல் நடத்தி தகர்த்ததாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் ஊடகத்தின் செல்போன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், ஏராளமான படகுகள் அழிக்கப்பட்டன எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதல்களை அமெரிக்க ராணுவம்தான் நடத்தியதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இத்துடன், அதிபர் டிரம்ப் கூறும் இந்தத் தாக்குதல்கள் குறித்து வெனிசுவேலா அரசு இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, அதிபர் நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெனிசுவேலா அரசு குற்றம்சாட்டியுள்ளது.
உறுதி செய்யப்படாத இந்தத் தாக்குதல், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் மீது டிரம்ப் நிர்வாகம் நடத்திய முதல் நேரடி தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
மேலும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்த தயார் என வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியா - பாக். உள்பட 8 போரை நிறுத்தியுள்ளேன்! - இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பில் டிரம்ப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.