
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2-ஆவது முறையாக மீண்டும் நாளை(ஜன. 20) பதவியேற்கவிருக்கிறார். இதற்காக அவர் விழா நடைபெறும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு சனிக்கிழமை(ஜன. 18) புறப்பட்டுச் சென்றார்.
ஃபுளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி, மகனுடன் புறப்பட்ட டிரம்ப் சனிக்கிழமை(ஜன. 18) நள்ளிரவில் சென்றடைந்தார். அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளதை குறிக்கும் விதமாக, அவர் சென்ற விமானத்தின் ‘ஸ்பெசல் மிஷன் 47’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிக்க : சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
உலக வல்லரசான அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றிலும், வெற்றிக்கான பந்தயத்தில் டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸே முன்னிலை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.