டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே அதிகரிக்கும் ’சிசேரியன்’!

பிறப்புசார் குடியுரிமை ரத்தால் இந்தியர்களிடையே அதிகரிக்கும் ’சிசேரியன்’!
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் பிறப்புசார் குடியுரிமை ரத்து செய்யப்படவிருப்பதால், முன்கூட்டிய பிறப்புகளுக்கான சிகிச்சை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிறப்புசார் குடியுரிமை சட்டத் திருத்தப்படி, வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படாது என்ற அறிவிப்பால், அமெரிக்காவில் வாழும் பலரும் முன்கூட்டிய பிரசவத்துக்கு முயல்கின்றனர்.

பெரும்பாலும் இந்தியர்களே சிசேரியன் செய்ய முயல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிசேரியன் செய்வதன் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் பல்வேறான பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணின் கடைசி மாதவிடாய்க் காலத்தின் முதல் நாளிலிருந்து அளவிடப்படும் 37 வாரங்களுக்கு முன்னதான பிறப்பை முன்கூட்டிய பிறப்பு என்று அறியப்படுகிறது. முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்தில் பல சிக்கல்களும் ஏற்படலாம்.

இருப்பினும், அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதற்காக அமெரிக்காவில் பலரும் சிசேரியன் செய்ய முயல்கின்றனர். சிசேரியனால் மேற்கொள்ளப்படும் முன்கூட்டிய பிறப்பு அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுவதாவது, “முன்கூட்டிய பிரசவத்துக்காக, மருந்துகள் மூலம் செயற்கை வலி உண்டாக்கப்படுகிறது. ஒருவேளை செயற்கை வலி ஏற்படவில்லையென்றால், சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிசேரியன் சிகிச்சையின்போது, தாயின் உடலில் பெரிய கீறல்கள் ஏற்படும்; கீறல்களினால் அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்படுவதுடன், தாயின் எதிர்கால கர்ப்பங்களையும் சிக்கலாக்கும்.

மேலும், சிகிச்சையின்போது தாயிடமிருந்து குழந்தையை வெளியே எடுப்பது குழந்தைக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, பெருமூளை வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறு, வளர்ச்சியில் தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

முன்னதாக, அமெரிக்காவில் குடியுரிமை அல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன் டொனால்ட் டிரம்ப் சில சட்டத் திருத்தங்களை அறிவித்தார். அவற்றில் பிறப்புசார் குடியுரிமையும் அடங்கும்.

பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு பிறகு, பெற்றோரில் ஒருவர் அமெரிக்கக் குடிமகனாக இல்லாவிட்டாலும், பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க பிறப்புசார் குடியுரிமை வழங்கப்படாது என்று டிரம்ப் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com