
பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.17 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அஜர்பைஜான் தலைமையில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், அந்நாட்டு அதிபர் இல்ஹெம் அலியேவ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கான்கெண்டி நகரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இருநாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் அஜர்பைஜானின் பொருளாதாரத் துறை அமைச்சர் மிகாயில் ஜப்பாரோவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், இந்த முதலீடு குறித்த விரிவான ஒப்பந்தம் அஜர்பைஜான் அதிபர் பாகிஸ்தான் வரும்போது கையெழுத்தாகும் என உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அவரது பாகிஸ்தான் பயணம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த சில காலமாக பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவுகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.