
செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான சாட்ஜிபிடியை, இளம் தலைமுறை, அளவுக்கதிகமாக நம்புவது மிகவும் தவறு, ஆபத்தானது என்று ஓபன்ஏஐ தலைமை செயல் நிர்வாகி சாம் ஆல்ட்மன் எச்சரித்துள்ளார்.
ஓபன்ஏஐ தலைமை செயல் நிர்வாகி சாம் ஆல்ட்மன், இளைஞர்களுக்கு இது தொடர்பாக விடுத்திருக்கும் எச்சரிக்கையில், செயற்கை நுண்ணறிவு சாட்ஜிபிடியை, முக்கிய முடிவுகளை எடுக்க பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வங்கித் துறை சார்ந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஆல்ட்மன், மக்கள், சாட்ஜிபிடியை அதிகம் நம்புகிறார்கள். இங்கே இருக்கும் சில இளைஞர்கள், தங்களது வாழ்க்கையில், மிக முக்கிய முடிவுகள் எதையும் சாட்ஜிபியை கேட்காமல் எடுக்க மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றுண்டிருக்கிறது. அது என்னை அறிந்திருக்கிறது, எனது நண்பர்களை அறிந்திருக்கிறது. அது என்ன சொல்கிறதோ, அதை நான் செய்வேன் என்கிறார்கள். இது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
தற்போதிருக்கும் இளைஞர்கள் மத்தியில், சாட்ஜிபிடியை நம்பும் போக்கு வரலாக இருப்பதாகவும் அவர் சட்டிக்காட்டியிருக்கிறார்.
ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி முதலில் செய்வது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது என்று கூறிய அவர், சாட்ஜிபிடி சிறந்த ஆலோசனையை வழங்கினாலும், எந்தத் துறை நிபுணர்களையும் விட சிறந்த ஆலோசனையை வழங்கினாலும், செயற்கை நுண்ணறிவு நமக்குச் சொல்லும் வகையில்தான் நாம் நம் வாழ்க்கையை வாழப் போகிறோம் என்பதை ஒருமித்து முடிவு செய்வது மிகவும் மோசமானது, ஆபத்தானது என்பதை நான் உணர்கிறேன் என்று மேலும் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சாட்ஜிபிடி பற்றி பேசிய சாம் ஆல்ட்மன், ஒவ்வொரு வயதினரும், அவரவர்களுக்கு உரிய முறையில் சாட்ஜிபிடியை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார்.
பயன்படுத்த மிகவும் எளிமையாக இருப்பதால், பெரியவர்கள், கூகுளுக்கு மாற்றாக சாட்ஜிபிடியை பயன்படுத்துகிறார்கள், 20 மற்றும் 30 வயதுடையவர்கள், தங்களது வாழ்க்கை ஆலோசகர் மற்றும் எல்லாமுமாகக் பார்க்கிறார்கள் என்று கூறியிருந்தார். கல்லூரிகளில், மாணவர்கள் பலரும் இயங்கு தளமாக பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
பல்வேறு கோப்புகளை பார்ப்பது, அந்தக் கோப்புகளில் எங்கெங்கு என்னென்னத் தகவல்கள் இருக்கின்றன என்பதையெல்லாம் தங்கள் மூளைக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் சாட்ஜிபிடியைப் பய்னபடுத்துகிறார்கள்.
அண்மையில் வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு
ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒரு முறையாவது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தலைமுறையினர் இதில் பங்கேற்றனர். அந்த ஆய்வில் பங்கேற்ற பாதி பேர், செயற்கை நுண்ணறிவு அளித்த ஆலோசனையில் கொஞ்சமாவது கேட்டு நடந்திருக்கிறேன் என்ற கூறியிருக்கிறார்கள். ஆனால், நம்பும் விகிதம் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இளம் வயதினர் அதிகம் நம்புகிறார்கள் அதாவது ஆய்வில் பங்கேற்ற 50 சதவீத இளம் தலைமுறையினர் அதிகம் நம்புகிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.