ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவரா? ஆக.1 முதல் புதிய விதிமுறைகள்!

ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. ஆக.1 முதல் புதிய விதிமுறைகள் நடைமுறை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைCenter-Center-Delhi

பொருளுக்கு பொருள் என பண்டமாற்றத்துக்கு மாற்றாக வந்த பணம் பல காலமாக கோலோச்சி வந்த நிலையில் அதற்கு மாற்றாக மாறியிருக்கிறது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள்.

இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சாதகமும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. எப்படி செலவழிக்கிறோம், எதற்காக செலவழிக்கிறோம் என்பதைப் பொருத்தே இது பொருந்தும்.

கையில் காசை வைத்துக்கொண்டு எண்ணி, எண்ணி செலவிட்ட மக்கள், எவ்வளவு செலவிடுகிறோம், எவ்வளவு கையில் இருக்கிறது என்றே தெரியாமல் செலவு செய்யும் அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மாற்றிவிட்டன.

இந்த டிஜிட்டல் பணப்பவரித்தனைகளை ஊக்குவிக்கும் போன்பே, ஜிபே, பிம் செயலிகளுக்கு சில விதிமுறைகள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

1. பண இருப்பு பற்றிய தகவல்

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, ஒவ்வொருப் பணப்பரிமாற்றத்துக்குப் பிறகும், ஒரு வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை வங்கிகள் பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வரவிருக்கிறது.

2. கையிருப்பை அறிய கட்டுப்பாடு

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளில், வங்கிக் கணக்கில் இருக்கும் கையிருப்பை, அடுத்தமாதம் முதல் ஒருவர் செயலி மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறைதான் பார்க்க முடியும்.

அதுபோல, செல்போன் செயலியில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கை ஒருவர் 25 முறைதான் பார்க்க முடியும்.

ஒரே நேரத்தில் எண்ணற்றோர், செயலிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சர்வர் பாதிப்பைத் தடுக்கும் வகையில், இந்த கட்டுப்பாடு ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

3. பரிமாற்ற நிலை

ஒரு பணப்பரிமாற்ற நிலையை ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறைதான் அறிய முடியும். அதுவும் 90 வினாடிகளுக்குப் பிறகே மற்றொரு முறை முயல முடியும்.

அதுபோல, தானாகவே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அதாவது, இஎம்ஐ செலுத்துவது, கடன் தவணை பிடித்தம் போன்றவை, நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மாற்றி ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் அவ்வப்போது அதனை பரிசோதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

4. என்ன காரணம்?

கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, பணப்பரிமாற்றம் தோல்வியடைதல் போன்றக் காரணங்களால், இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

5. இனி என்னவாகும்?

இது குறித்து வந்த புகார்களைக் கவனத்தில் கொண்ட இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், மக்கள் அடிக்கடி பணக் கையிருப்பை சோதிப்பது, பணப்பரிமாற்ற நிலையை சோதிப்பது போன்றவையே இந்த தொழில்நுட்பக் குறைபாடுகளுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த புதிய மாற்றங்கள் மூலம், பணப்பரிமாற்றங்கள் வேகமாக நடைபெறும், பயன்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பணப்பரிமாற்றம் செய்வது மற்றும் தொகையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.ஒருவர் அதிகபட்சமாக ஒரே பணப்பரிமாற்றத்தில் ரூ.1 லட்சம் வரைதான் செலுத்த முடியும், கல்வி அல்லது மருத்துவ சிகிச்சைக்காக என்றால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்யலாம். இதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

6. நாம் எதாவது செய்ய வேண்டுமா?

இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த விதிமுறைக்கு ஏற்ப யுபிஐ செயலிகளே மேம்படுத்தப்படும். இந்த விதிகளை அறிந்து கொண்டால் ஒரு நாளைக்கு அதிகபட்ச எண்ணிக்கையைக் கடந்துவிட்டு அவதிக்குள்ளாக வேண்டியதில்லை.

Summary

While money has long been a substitute for barter, digital payments have become its replacement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com