கேரளத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை, கொலை: சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி கைது!
கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறைச் சாலையிலிருந்து தப்பிய நிலையில், ஒரு மணி நரேத்தில் பிடிபட்டார்.
கன்னூர் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி, கன்னூர் மாவட்டம் தலப்பு பகுதியில் இருந்த காலி மனையில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி என்கிற சார்லே தாமஸ், வெள்ளிக்கிழமை அதிகாலை, தன்னுடைய அறையிலிருந்து காணாமல் போனார். தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த 49 வயது கோவிந்தசாமி, கேரளத்தின் மிக பயங்கரக் குற்றவாளிகளில் ஒருவராக உள்ளார்.
2011ஆம் ஆண்டு, 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், காணாமல் போனதும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை தேடினர்.
அவருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், காலி மனை ஒன்றில், இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, சிறைச்சாலையிலிருந்து எவ்வாறு கோவிந்தசாமி தப்பிச் சென்றார் என்பது பற்றி விசாரணை நடத்த, உயர் நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிந்தசாமி ஒரு மாற்றுத்திறனாளி என்பதும், அவர் கைத்தடி வைத்தே நடப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலும், அவர் கடுமையான பாதுகாப்பு அரண்களைத் தாண்டி, சிறையிலிருந்து தப்பிச் சென்றிருப்பது, சிறைத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவிந்தசாமி சிறையிலிருந்து தப்பிச் சென்றிருப்பதால், சிறைத் துறையில் இருந்த கண்காணிப்புக் குறைபாடுகள் மற்றும் சிறைத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறைத் துறை அறிக்கை அளிக்கவும் மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.
குற்றத்தின் பின்னணி?
கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி வல்லதோல் நகர் ரயில் நிலையத்தின் பொதுப் பெட்டியில் ஒரு பெண் ஏறியிருக்கிறார். அவரை, அதேப் பேட்டியில் ஏறிய கோவிந்தசாமி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். அவர் கத்திக் கூச்சலிடவே, அப்பெண்ணின் தலையை பலமாக இடித்து மயக்கமடையச் செய்து, ரயிலிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறார்.
மறுப்பக்கம் ஓடும் ரயிலிருந்து கோவிந்தசாமியும் குதித்திருக்கிறார். கீழே விழுந்து ரத்த வெள்ளத்திலிருந்த அப்பெண்ணை கோவிந்தசாமி, பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடமிருந்த செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பியிருக்கிறார்.
இந்த ரயிலில், மற்றொரு பெட்டியில் பயணித்த பயணிகள், பெண்ணின் அழுகுரல் கேட்டதாக, அடுத்த ரயில் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், அவர்கள் விரைந்து சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனை தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும், தொடர்ந்து ஆறு நாள்கள் போராட்டத்துக்குப் பின், அப்பெண் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.
இந்த வழக்கில், குற்றவாளி, கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கன்னூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
In the state of Kerala, a convicted murderer who raped and murdered a woman on a moving train in 2011 was caught a few hours after escaping from prison.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.