
இணையதளங்களுக்கு இதுவரை அச்சாணியாக இருந்துவந்த கூகுள், தற்போது செய்யறிவின் தாக்கத்தால், இணையதளங்களையே புரட்டிப்போட வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மக்களின் இணையதள பயன்பாட்டையே குறைத்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மக்கள் எதையேனும் தேடும்போது, நேராக கூகுள் பக்கத்துக்குச் சென்று அங்கு தங்களது சந்தேகத்தை முன்வைக்கிறார்கள். முதலில், மக்கள் தேடுவதற்கு சரியான இணையதளங்களை கூகுள் பரிந்துரைக்கும். அதிலிருந்து அவர்களுக்கு ஏற்றதாக ஒரு இணைப்பைக் கிளிக் செய்து மக்கள் அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலைப் படித்துப் பயன்பெற்று வந்தனர். இந்த கூகுள் பரிந்துரை மூலம் பல இணையதளங்களின் பயனர் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை போன்றவை நிர்ணயிக்கப்பட்டு வந்தது-
ஆனால், கூகுள் - செய்யறிவு ஓவர்வியூ முறையிலிருந்து முற்றிலும் செய்யறிவு முறைக்கு மாறியிருக்கிறது. அதாவது, இதுவரை இருந்த கூகுள் தேடல் முடிவுகளை செய்யறிவு முற்றிலும் மாற்ற முயன்று வருகிறது. ஒரு செய்யறிவு சாட்பாட்கள், பயனர் கேட்கும் கட்டுரைகளை ஒரு நிமிடத்தில் தயாரித்துக் கொடுத்து வருகிறது. மறுபக்கம் மக்கள் கேட்கும் தேடல்களை அதுவே பல இணையதளங்களில் படித்து சுருக்கமாக விளக்கம் கொடுத்து விடுகிறது.
இதனால், மக்களின் இணையதள பயன்பாடு மற்றும் இணையதளத்தில் உலவும் முறையையே செய்யறிவு மூலம் கூகுள் மாற்றிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதாவது, கூகுளில் ஒரு விவரத்தைத் தேடும்போது, அதன் செய்யறிவானது ஒரு சுருக்கமான விளக்கத்தை அந்தப் பக்கத்திலேயே காட்டுகிறது. இதனால், பெரும்பாலான இணையதளங்களின், பயன்பாட்டு நேரம், பார்வையிடுபவர்களின் அளவு குறைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதாவது, சுமார் 1000 பேர் பங்கேற்ற ஆய்வு ஒன்றின் முடிவுகள் பல அடிப்படையான விவரங்களை எடுத்துரைக்கிறது. அதாவது, ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்களது இணையதள தேடுதல் விவரங்களை பகிர்ந்துகொள்ள ஒப்புக் கொண்டனர். அதன்படி, ஆய்வில் பங்கேற்றவர்களில் 58 சதவீதம் பேர், கூகுளின் செய்யறிவு சுருக்க விளக்கத்தை ஒரு முறையேனும் படித்திருக்கிறார்கள் என்பதே அது. அண்மையில் கூகுள் அறிமுகப்படுத்திய செய்யறிவு மோட், முற்றிலும் பழைய தேடு பொறி அமைப்பையே மாற்றி, செய்யறிவு முறைக்குக் கொண்டுவர தீவிரம் காட்டி வருவதையும் நன்கு அறிய முடிகிறது என்கிறது ஆய்வுகள்.
இதன் மூலம், ஒரு பயனர், கூகுளில் விவரத்தைத் தேடும்போது, இணையதளத்தின் லிங்குகளை கிளிக் செய்வதைவிடவும், அதன் ஏஐ சுருக்க விளக்கத்தைப் படிக்கவே விரும்புகிறார்கள் என்றும், ஒரு சிலரே, லிங்குகளை கிளிக் செய்வதாகவும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏஐ சுருக்க விளக்கத்தைப் பார்த்த பயனர்கள் வெறும் 8 சதவீதம்தான் வழக்கமான லிங்குகளை கிளிக் செய்ததாகவும், இதுவரை ஏஐ சுருக்க விளக்கத்தைக் கவனிக்காத பயனர்கள் 15 சதவீதம் லிங்குகளை கிளிக் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், கூகுளில் ஏஐ சுருக்க விளக்கத்தைப் படித்த ஒரு பயனர் உடனடியாக அந்த இணையப் பயன்பாட்டை 26 சதவீதம் பேர் மூடிவிடுவதாகவும், லிங்குகளைக் கிளிக் செய்து படித்தவர்களைக் காட்டிலும் இது அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதாவது, 16 சதவீதம் பேர் தான் இணையத்தை மூடிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இணையதளங்களுக்கு பின்னடைவா?
ஏற்கனவே, பேஷன், சுற்றுலா, சமையல் தொகுப்பு உள்ளிட்டவற்றை வழங்கி வரும் இணையதளங்கள், ஏஐ சுருக்க விளக்க முறை வந்தபிறகு, தங்கள் இணையதளங்களின் வருகையாளர்கள் எண்ணிக்கை சற்றுக் குறைந்திருப்பதாகப் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பிட்ட பிராண்டுகளின் பெயர்களைக் கொண்டுத் தேடும்போது மட்டுமே அந்த இணையதளங்களுக்குச் செல்வோர் கட்டாயம் அந்த லிங்குகளைக் கிளிக் செய்வதாகவும், பொதுவான தேடுதல்களின்போது ஏஐ விளக்கத்தையே படித்துவிட்டு, அந்த தகவல் எங்கிருந்து வந்தது என்பது பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. செய்யறிவால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து: ஜெஃப்ரி ஹிண்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.