
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் வான்வழிக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஈரான் மீது தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அரசு கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை ஈரானுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து எந்த நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும், ஈரானின் ராணுவ முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கியுள்ளது, இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு தொடர்பில்லை
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிரான தாக்குதலில் நாங்கள் ஈடுபடவில்லை, இஸ்ரேலின் தன்னிச்சையான முடிவு இது, அமெரிக்க படைகளையோ, பணியாளர்களையோ ஈரான் குறிவைக்கக் கூடாது என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.