இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
லெவோடோபி லகி லகி எரிமலை வெடிப்பால் பரவியுள்ள புகை...
லெவோடோபி லகி லகி எரிமலை வெடிப்பால் பரவியுள்ள புகை...ஏபி
Published on
Updated on
1 min read

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் திமூர் மாவட்டத்திலுள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை, நேற்று (ஜூன் 17) மாலை சீற்றமடைந்து வெடித்தது. இதனால், இன்று (ஜூன் 18) வரை அப்பகுதியில் சுமார் 32,800 அடி உயரத்துக்கு கரும்புகைகள் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் 8 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, வெளியான விடியோக்களில், இந்த எரிமலை வெடிப்பினால், சாம்பல் மற்றும் இடிபாடுகள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு அங்குள்ள பல கிராமங்களின் மீது விழுந்திருப்பது பதிவாகியுள்ளது.

எரிமலையைச் சுற்றியிருந்த கிராமங்களின் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு 12 கி.மீ. தொலைவிலுள்ள நிலெக்னோஹெங் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எரிமலையின் சாம்பல்கள் மற்றும் புகையானது விமானங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலானது என்பதால், பாலி நகரத்துக்கும் பல்வேறு சர்வதேச நகரங்களுக்கும் இடையிலான ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலியிலிருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, நூற்றுக்கணக்கான தீவுகளினால் உருவான இந்தோனேசியா நாட்டில் சுமார் 120 எரிமலைகள் உள்ளன. மேலும், ரிங் ஆஃப் ஃபையர் என்றழைக்கப்படும் டெக்டோனிக் தகடுகளின் மிகப் பெரியளவிலான பிளவுக்கோட்டின் மீது இந்நாடு அமைந்துள்ளதால், இயற்கை சீற்றங்களுக்கான அபாயம் என்றுமே உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com